
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் தோன்றியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குறிப்பாக தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் முன்னரைப் போன்று வரலாற்றுத் தவறுகளை இனியும் இழைக்கக் கூடாது என்பது எமது கட்சியின் நோக்கமாகும். இது குறித்து காலத்துக்கு காலம் தாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தற்போது பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
எமது கட்சியைப் பொறுத்த வரை 13 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எத்தகைய நன் மையும் கிடைக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
13 ஆவது அரசியல் திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் அதுவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகி விடும் என்று கருதிவிட முடியாது. நாம் பல தடவை 13 ஆவது திருத்தத்தில் எந்த பயனும் இல்லை என்று வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆனால் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான சந்தர்ப்பமாக 13 ஆவது திருத்தத்தைக் காட்டுகின்றனர். இன்று அந்தச் சட்டம் கேள்விக் குறி ஆகியுள்ளது.
ஆனால் மாகாண சபைகளை ஆரம்ப புள்ளியாகக் கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும் கூறுமளவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர்.
எங்களைப் பொறுத்த வரையில் இந்த 13 ஆவது திருத்தம் தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழ் மக்களுக் கென பெயரளவில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றது.
இதனால் தமிழ் மக்களும் இந்த 13 ஆவது திருத்தத்தில் ஏதோ இருக்கின்றது என நினைப்பது ஆபத்தானது. எதிர்த்தரப்புக்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எங்கள் இருப்புக்கான முடிவு ளை எடுக்க முடியாது.
இவ்விடயத்தில் தமிழ் புத்தி ஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் கடமையுள்ளது. 13 ஆவது திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, இன்றுள்ள பூகோள அரசியல் நிலைமைகளையும் அதில் தமிழ் மக்களுக்குள்ள வாய்ப்புக்களையும், தமிழ் மக்களது அரசியல் பலங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதனூடாக மக்களை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தவறாக முடிவுகளை எடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
இதன் மூலம் இன்று பூகோள அரசியல் மாற்றத்தினூடாக எமக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பான சூழ்நிலையை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றுள்ளது.
No comments:
Post a Comment