sc
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும் அவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, திமுக மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், அதிமுக மக்களவை உறுப்பினர் எம். தம்பிதுரை ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஒரே வழக்காகக் கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அவர்களின் மனு தொடர்பாக நான்கு வாரத்தில் மத்திய அரசும், தமிழக மீன் வளத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவரும் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி பி. சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
விஜயன் சார்பில் வழக்குரைஞர் வெங்கட்ரமணியும், தம்பிதுரை சார்பில் வழக்குரைஞர் கோபாலும் ஆஜராகினர்.
அதைத் தொடர்ந்து மனுவை விசாரணைக்கு அனுமதித்த தலைமை நீதிபதி சதாசிவம், “இந்த விஷயத்துக்காகவாவது இரு கட்சிகளும் ஒன்றாக வந்துள்ளனவே’ என்று குறிப்பிட்டார்.
“தமிழக மீனவர்களைக் கைது செய்ததும் சிறைப்பிடிக்கப்படும் அவர்களின் படகுகளை மீட்க ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலைமை கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய கடல் எல்லையை மீனவர்கள் கண்டறியும் வசதிகளை உருவாக்க வாய்ப்புள்ளதா? இப் பிரச்னையை ராஜ்ஜிய அளவில் பேசித் தீர்க்க முடியுமா என்று மத்திய அரசு வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி சதாசிவம் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இரு மனுக்களும் ஒரே விவகாரம் தொடர்புடையவை என்பதால், அவற்றை சேர்த்து விசாரிப்பதாகவும், அந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசும், தமிழக மீன் வளத் துறையும் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.