
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐ.நாவின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரும் ஜோர்தான் இளவரசருமான அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அவர் கவலை வௌியிட்டுள்ளார். இதேவேளை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை (08) ஆரம்பமாகி 26ம் திகதி வரை இடம்பெறவுள்ளன. முன்னதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த நவனீதம் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியுடன் விடைபெற்றதை அடுத்து, புதிய ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் அல் ஹூசெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவனீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பாராபட்சமாக செயற்பட்டதாகவும், அல் ஹூசெய்ன் அவ்வாறு செயற்படமாட்டார் எனவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment