Wednesday, October 08, 2014

TV இல் பேட்டி என்றால் எபொல்லா வைரஸ் தாக்கி இருந்தாலும் எழுந்து செல்லும் தமிழர் !


2009 மே மாதம் 18ம் திகதி வந்தது தான் வந்தது, அன்றில் இருந்து குழப்பங்கள் தான் மிச்சம். BTF என்று ஒரு அமைப்பு, அதில் இருந்து பிரிந்து GTF என்று ஒரு அமைப்பு, பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசு என்று ஒரு அமைப்பு, ஏன் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி என்று கூட ஒன்றைபதிவுசெய்தார்கள். ஆரம்பத்தில் தமிழ் ஈழம் காணப்போகிறோம் என்று சொல்லி புறப்பட்ட பல அமைப்புகள், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, கூனிக் குறுகி நிற்கிறார்கள். இங்கிலாந்து
அரசியல்வாதிகளோடு அதிகம் பழக்கம் வைத்துள்ள, இந்த அமைப்பை சேர்ந்த சிலர் தமிழ் ஈழம் என்றாலே அலேர்ஜி என்கிறார்கள். தமிழீழ தேசிய கொடியை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு கொண்டுவரக் கூடாது என்று BTF அமைப்பினர் பகிரங்கமாகவே கூறிவந்தார்கள். இவர்களுக்கு GTF அமைப்பை பார்த்தால் ஆகாது ! கீரியும் பாம்பையும்போல சண்டை பிடிப்பார்கள்.
நல்ல கதை. ஆனால், உண்மையாக நடந்த ஒரு கதை சொல்லவா ?
அனைவராலும் அறியப்பட்ட ஒருவர், சிங்கள ராணுவம் இளைஞர்களைச் சுடும் காட்சியை முதலில் வெளியிட்ட நபர். அவர் ஒரு தமிழரோடு உணவகத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். "நான் சோமாலியா காரன், குருதிஷ் மக்கள், ஆபிரிக்க நாட்டவர்கள் என்று பல இன மக்களோடு பழகியுள்ளேன். ஆனால் உங்கள் தமிழர்களைப் போல ஒரு இனத்தை கண்டதே இல்லை என்று மனம் வருந்தியுள்ளார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று அன் நபர் கேட்டுள்ளார். எனது ஆபிசுக்கு 3 பேர் வந்தார்கள். தம்மிடம் இருந்த போர் குற்ற ஆதார வீடியோவை எனக்கு தந்தார்கள். நன்றாகப் பேசினார்கள். பின்னர் சென்றுவிட்டார்கள். வந்த அந்த 3 பேரில் ஒரு நபர், என்னை மாலை தொடர்புகொண்டு தன்னோடு வந்த மற்றைய 2 நபர்களையும் நம்ப வேண்டாம் என்று சொன்னார். பின்னர் கொஞ்ச நேரம் கழித்து, அந்த 3 பேரில் மற்றைய நபர் தொலைபேசியில் அழைத்து ஏனைய 2 பேரையும் நப்ப வேண்டாம் என்று சொன்னார்.3வது நபடும் சும்மா இருக்க வில்லை அவரும் தொலைபேசியில் அழைத்து ஏனைய 2 நபர்களும் கோட்டபாயவின் ஆட்கள் என்கிறார். நான் ஆடிப்போய்விட்டேன். உங்கள் சமூகத்தில் என்ன தான் நடக்கிறது ? என்று கேட்டுள்ளார்.
உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது என்று விவரமாகச் சொல்ல எனக்கு தொலைபேசி அழைப்பை விடுபவர்கள் ஒன்று அல்லது 2 பேர் தான். அடுத்தவரைப் பற்றி குற்றஞ்சொல்ல, அவரை துரோகி என்று சொல்ல, இவரைக் கெட்டவர் என்று சொல்லவே எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் குற்றஞ்சொல்வதில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படி என்றால் எதனை தான் நீங்கள் உண்மையாகச் செய்து முடித்தீர்கள் ? என்று இந்த வெள்ளை இனத்தவர் பார்த்து கேட்க்கும் அளவு எமது பிரச்சனை புரையோடிப்போய் உள்ளது. இப்போது எல்லாம் இங்கே உள்ள அமைப்புகளுக்கு தமிழ் ஈழம் முக்கியம் அல்ல. பிரித்தானியாவில் உள்ள 2 அரசியல்வாதிகளுக்கு பக்கத்தில் நின்று போட்டோ எடுப்பது தான் முக்கியம். கேட்டால் சொல்வார்கள் தான் தமிழர்கள் குறித்து பேசினோம் என்று. எடுத்துக்கொண்ட அந்த போட்டோவை இணையத்தில் போட “நாய்கள்” போல அலைந்து திரிவார்கள். 1000 தடவை போன் செய்து அந்த எனது படத்தை முதல் பக்கத்தில் , முதல் செய்தியாகப் போடுங்கள் என்று கெஞ்சுவார்கள்.
இதேவேளை சுவிஸை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஊடகம், இதனை நன்றாகப் பயன்படுத்த தவறுவதே இல்லை. என்ன செய்து என்று எல்லாம் அவர்கள் பார்க மாட்டார்களப்பா. காசு கொடுத்தால் போதும் உடனே செய்தியை முக்கியமான இடத்தில் போட்டுவிடுவார்கள். இப்படி காசு கொடுத்து செய்தியைப் போடும் கலாச்சாரமும் நன்றாகவே வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் தான் இதுபோன்ற அமைப்புகள் சில தமது கைகளில், "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்ற புதிய வடிவத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். நாடு கடந்த அரசாங்கத்தை பொறுத்தவரை அவர்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று கூறி , இறுக்கமான நிலையில் உள்ளார்கள். அதனால் அவர்களை மேற்கு உலகம் சற்று தள்ளியே வைத்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆனால் தற்போது இந்தியா சென்றுள்ள உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு தான் ஒரே வழி என்று கூறியுள்ளார்.
தாமே தமிழர்களின் ஏக போக பிரதிநிதி என்று இவர்கள் கூறிவருகிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களுக்கு தெரியுமோ தெரியவில்லை. BTF அமைப்பை பொறுத்தவரை என்ன நிலைப்பாடு என்பதனை அவர்கள் இன்றுவரை தெளிவாக எதனையும் சொல்லவில்லை. ஆனால் தேசிய கொடி கொண்டுவருவதை அவர்கள் கடுமையாக எதிர்கிறார்கள். வெள்ளைக்கார அரசியல் வாதிகளுக்கு எது பிடிக்காதோ அதனை செய்யக்கூடாது என்று நினைக்கும் ஒரு மாந்தர் கூட்டம் BTF ல் இன்னமும் இருப்பதால் தான் இது நடந்து வருகிறது. இதுபோல தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் யார் ? ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ! ஒருவரை ஒருவர் பார்த்து துரோகி என்று பழிப்பதும், ஒருவர் செய்வதை மற்றவர் பார்த்து எள்ளி நகையாடி காலத்தை கழிப்பதுமாக உள்ளது. கேட்டால் நான் தமிழர்களுக்காக வேலைசெய்கிறேன் என்கிறார்கள்.
அட இதுவாவது போகட்டும். தனக்கு பிடிக்காத ஒரு ஆள் எதனையாவது செய்தால் கூட அதனை மட்டம் தட்டுவார்கள். அது நல்ல காரியமாக இருந்தால் கூட பரவாயில்லை. எதிரி நாசமாகவேண்டும் என்பது தான் நிலைப்பாடாக இருக்கும். ஒரு வெள்ளைக்கார MP யோடு ஒருவர் இணைந்து வேலைசெய்தால் போது, அவருக்கு பிடிக்காத நபர் 1000 ஈமெயிலை அந்த வெள்ளைக்கார MPக்கு போட்டு அந்த வேலைத் திட்டத்தை குழப்புவார். அது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் விடையமாக கூட இருக்கலாம். ஆனால் எனக்கு பிடிக்காத ஆள் செய்தால் குற்றம் !
ஆனால் TV இல் கதைக்கவேனும் வருவீர்களா இல்லை ரேடியோவில் கதைக்கவேண்டும் வருவீர்களா என்று கேட்டால் மட்டும் போதும். தடிமன், காச்சல் ஏன் எபொல்லா வைரஸ் தாக்கி இருந்தால் கூட , அப்படியே படுக்கையை விட்டு எழுந்து சென்று “பேட்டி” கொடுப்பார்கள். வேலைசெய்யாத கமரா முன்பாக நின்று கூட பேட்டி கொடுப்பார்கள். ஆம் இதுவும் உண்மையே. லண்டனில் நடந்த ஆர்பாட்டம் ஒன்றில் ஒரு ஊடகவியலாளர் கொண்டு சென்ற கமரா வேலைசெய்யவில்லை. அதில் மெமரி காட்டை அவர் போடவும் இல்லை. அங்கே நின்ற சிலரை இவர் பேட்டி கண்டுள்ளார். கமரா சுவிஜ் ஆப் செய்யப்பட்டுள்ளது கூட தெரியாமல் பேட்டி கொடுக்கிறார்கள். இப்படி தான் இருக்கிறது இன்றைய தமிழீழ போராட்டம். இதற்காகவா 44,000 போராளிகளும் 1லட்சத்தி 60 ஆயிரம் பொது மக்களும் இறந்தார்கள் ?
இப்ப கூட இவர்கள் இந்த கட்டுரையை, எழுதிய நபர் மீது தான் கடுப்பாக இருப்பார்கள். இவர் என்ன ஜோக்கியமானவரா ? என்று கேட்ப்பார்கள். அட கோட்டபாய சொல்லிதான் இவன் இப்படி எழுதி இருக்கான் என்று கூட ஒரு கோஷ்டி சொல்லும் ! ஆனால் நாம் எங்கே போகிறோம் ? இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நாம் எழுதாமல் இருக்க முடியுமா ? பிரித்தானியா மற்றும் 14 நாடுகளில் இயங்கிவரும் TCC என்று அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாத்திரமே ஓரளவிற்கேனும் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒரு காரணமும் உண்டு என்று சொல்லலாம். இந்த அமைப்பு அரசியலில் பெரிதும் ஈடுபடுவது இல்லை எனலாம்.நடத்தப்படவேண்டிய போராட்டங்கள், ஆனாலும் சரி, இல்லை மாவீர தினமாக இருந்தாலும் சரி. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த TCC அமைப்பு தான் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது. இதனை எவராலும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது.
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்

No comments:

Post a Comment