Thursday, December 25, 2014

ஈழத்தமிழர் துயர் தனைத் துடைத்திட மீண்டும் இந்த மண்ணிலே பிறக்க வேண்டும் எம்.ஜி.ஆர்.

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.

தர்மத்தின் காவலனாய், கொடையிலே கர்ணனாய், கலையிலே மன்னனாய், கருணையிலே பொன்மனச் செம்மலாய், கருத்துக்கொள்கையிலே புரட்சித் தலைவராய், ஏழைகள் இதயத்திலே மன்னாதி மன்னனாய், மக்கள் மனதிலே திலகமாய் ஒளிர்ந்த எம்.ஜி.ஆர். மனிதருள் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இவரது கருணைப் பார்வை பட்டு எண்ணற்ற மக்கள் வளமான வாழ்வு பெற்றனர். இவர் ஏழைகள் மீது தன் உயிரையே வைத்திருந்தார்.

இந்தியாவிலுள்ள கேரளாவிலிருந்து வந்து ஈழவள நாட்டின் கண்டிமா நகரிலே குடியிருந்த மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியவதி அம்மையாருக்கும் 17.01.1917ஆம் ஆண்டு கடைக்குட்டியாக எம்.ஜி. இராச்சந்திரன் பிறந்தார். இவருடைய உண்மைப் பெயர் ராம்சந்தர் நாயர். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவே ஈழத்தினின்றும் தமிழகத்திற்குத் தன் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த அன்னை சத்தியவதி, வறுமையின் கோரப்பிடியில் வாடினார். பிள்ளைகளுக்கு ஒருநேரக் கஞ்சி ஊற்றவே கதியற்றுக் கலங்கினார். இதனால், எம்.ஜி.ஆர். 3ஆம் தரத்துடன் கல்விக்கு முழுக்குப் போட்டார்.

அன்னை தான் தெய்வம் என நினைந்து, தாய் சொல் தட்டாத உத்தமபுத்திரனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் அன்னை வறுமையால் வாடுவதைச் சகிக்க முடியாத இவர், தனது 7ஆவது வயதில் அண்ணன் சக்ரபாணியுடன் இணைந்து நாடக மன்றங்களில் நடித்து வந்தார். பின்னர் 19ஆவது வயதில் ‘சதிலீலாவதி’ எனும் திரைப்படத்துடன் திரையுலகில் காலடி பதித்தார். தனது 30ஆவது வயதில் அதாவது, 1947ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துப் பெற்றார். எனினும், வறுமை அவரை விட்டுப் போவதாக இல்லை.

இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கிணங்க எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 30 வயதுக்கு மேல் ‘சந்திரோதயம்’ 40இற்கு மேல் ‘சூரியோதயம்’ என்று சடுதியாகத் திரையுலகில் வளர்ந்தார், இமயமென உயர்ந்தார். அறிஞர் அண்ணாவின் நிழலில் அருமைத் தம்பியாக வளர்ந்த இவர், நன்றி மறவாத நல்மனம் படைத்தவராகக் கடைசிவரை வாழ்ந்தார். தனது திரைப்பாடல்கள் மூலம் அண்ணாவை அவர் போற்றிவந்தார்.

கலையுலகில் சந்திரனாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த வேளை, 1977ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். அரசியல், சமுதாய நோக்கம் நிறைவேறக் கலை சிறந்த சாதனம் என்பதை நிரூபித்துக் காட்டிய எம்.ஜி.ஆர், தமிழகத்தில் முதலமைச்சராகிய முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர். தனது கலையுலக வாரிசான செல்வி ஜெயலலிதா ஜெயராமை அரசியலிலும் வாரிசாக்கி, தான் வரித்துக்கொண்ட அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமித்தார்.

பெரியார் வழி நின்று, பெருந்தலைவர் காமராஜர் கொள்கையைப் பின்பற்றி ஏழைகள் வாழ்வு ஏற்றம் காண உண்மையாக உழைத்த உத்தமரான எம்.ஜி.ஆர், ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர். ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை, பாடசாலைகள் ஸ்தாபித்தவர். ஏழைச் சிறார்களுக்கெனச் சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தன் சொத்துக்கள் யாவையுமே ஏழைகளின் இதய வங்கிகளில் வைப்புச் செய்தவர். பெண்கள் மீது தனி மரியாதை செலுத்தி, எல்லோரையுமே அன்னையராய், அன்புச் சகோதரிகளாய் மதித்தவர். அம்புலி காட்டி அமுதூட்டும் அன்னையர் வாழும் தமிழ் நாட்டில் – சந்திரனே வந்து அன்னையர்க்கும் சோறூட்டிய கலியுக வள்ளலாகத் திகழ்ந்தவர்.

ஈழத் தமிழர்கள் பால் அளவற்ற பற்றும் பாசமும் கொண்ட இவர், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது சொந்த நிதியிலிருந்து இருகட்டங்களாக மொத்தம் 6 கோடியே 37 இலட்சம் ரூபாவைக் கொடுத்து உதவியவர். அதுமட்டுமன்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருங்கிப் பழகிய இவர், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்.

மக்கள் துயர் துடைத்து – மக்கள் பணி புரிந்து – மக்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்ததால், ‘மக்கள் திலகம்’ என்றும் – புன்சிரிப்போடு பொன் பொருளை வாரி வாரி வழங்கியதால், ‘பொன்மனச் செம்மல்’ என்றும் – நடிப்புலகில் புதுமைகளைப் புகுத்தியதால், ‘புரட்சித் தலைவர்’ என்றும் – மக்களுக்கெல்லாம் தன் நடிப்பின் மூலம் பாடம் புகட்டி வந்ததால், ‘வாத்தியார்’ என்றும் – பாரத நாட்டின் ஒப்பற்ற தலைமகன்களில் ஒருவராக விளங்கியதால், ‘பாரத ரத்னா’ என்றும் – கலையுலகில் இணையற்று விளங்கியதால், ‘கலையுலக மன்னன்’ என்றும் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்ற எம்.ஜி.ஆர். உண்மையில் ஒரு தனிப்பிறவி தான்.

பெயருக்குள் பொதிந்திருக்கும் எண் பொருத்தத்தில் மேலை நாட்டவர்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், இவரது மூன்றெழுத்து இரகசியம் (எம்.ஜி.ஆர்.) ஜோதிட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது, மருதூரைக் குறிக்கும் ஆ எழுத்தையும் தகப்பனாரான கோபாலமேனனின் முதல் எழுத்தான பு எழுத்தையும் இராமச்சந்திரன் என்கின்ற தனது முதல் எழுத்தான சு ஐயும் உன்றிணைத்து ஆ.பு.சு. என்று தனது பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொண்டவர். இப்பெயர்ச் சுருக்கத்தின் அதிர்ஷ்ட பலனே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது என்று ஜோதிட உலகில் வியப்புடன் பேசப்படுகிறது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்…” என்று அவர் பாடி நடித்ததைப் போன்று அவரது புகழ் என்றுமே அழியாது.

மேலும், “காலத்தை வென்றவன் நீ, காவிய நாயகன் நீ…” என்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா பாடி நடித்தது போன்று எம்.ஜி.ஆர். காலத்தை வென்று வாழ்கிறார். இவர் மண்ணுலகிலே மூன்று தடவைகள் உயிர் பிரியும் அளவுக்குக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மக்கள் பிரார்த்தனையால் தப்பியவர். நான்காவது தடவை ஏற்பட்ட அந்நோயினால் இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்.

எல்லோருக்கும் நல்லவரான, ஏழைகளின் இதயத்தில் நிறைந்தவான எம்.ஜி.ஆர்., சொல்லும் செயலும் ஒன்றாய்ச் சேர்ந்த சாதனைத் தலைவர். இன்று அவர் எம்மத்தியில் இல்லை. இப்படி ஒருவர் பிறந்ததில்லை, இனியும் ஒருவர் பிறப்பதில்லை எனும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர். நீதிக்குத் தலைவணங்கிய நல்ல இதயம், நாடோடி மன்னனாக வலம் வந்த அன்பு உள்ளம் தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து 24.12.1987ஆம் ஆண்டு பிரிந்து சென்றுவிட்டது.

காலத்தை வென்றவர், காவிய நாயகர், கருணையின் தூதுவர் எம்.ஜி.ஆர். கடையெழு வள்ளல்கள் வடிவினில் உலவிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். தோன்றிற் புகழொடு தோன்றுக ன்ற குறளுக்குச் சான்றாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் துயர்;தனைத் துடைத்திட மீண்டும் இந்த மண்ணிலே பிறக்க வேண்டும் எம்.ஜி.ஆர்.
source:pathivu
எஸ். மல்லிகா

No comments:

Post a Comment