Sunday, January 18, 2015

அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ஷே கொழும்புவுக்கு இன்று அனுப்பிய பேக்ஸ்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் சகோதரரும், கடந்த ஆட்சியில் அதிகாரம் மிக்க அமைச்சராக இருந்தவருமான பசில் ராஜபக்ஷே, மீண்டும் இலங்கைக்கு வரும் உத்தேசம் கிடையாது என தமக்கு நெருக்கமானவர்களுக்கு கூறியுள்ளதாக ஒரு பேச்சு, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, மகிந்த ராஜபக்ஷே பதவி இழந்தபின் பசில் ராஜபக்ஷே ஏன் திடீரென இலங்கையை விட்டு கிளம்பிச் சென்றார் என்பது குறித்து நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம். பசில் ராஜபக்ஷே தற்போது அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ளார். இவரிடம் அமெரிக்க கிரீன் காட் உள்ளது. பசில் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு மகிந்த தரப்பினரிடம் நேற்றுவரை இருந்தது, ஆனால் நிலைமை தலைகீழ் என்பதற்கு, அமெரிக்காவில் இருந்து பசில் அனுப்பியுள்ள பேக்ஸ் ஒன்றே போதும்” என்கிறார்கள்.

இவர் குறிப்பிடும் பேக்ஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று மாலை வந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் அனுரா பிரியதர்ஷன யாப்பா பெயருக்கு எழுதப்பட்டிருந்த கடிதம் அது. அதை அனுப்பியிருந்தது, பசில் ராஜபக்ஷேதான். கடிதத்தில் பசில் ராஜபக்ஷே, ஜனாதிபதி தேர்தலில் தமது சகோதரரின் தோல்விக்கு தாமே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும், அதனால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பதவியை ராஜினாமா செய்வதாகவும் எழுதியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறையின்படி, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரே, தேர்தல் செயல்பாடுகளை வழிநடத்துவார். கட்சிப் பதவியில் இருந்து பசில் ராஜினாமா செய்தாலும், எம்.பி. பதவியை தொடர்ந்தும் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து பல மாதங்கள் அவர் இலங்கைக்கு வராமலே விட்டால், எம்.பி. பதவியையும் இழக்க நேரிடும்.
தேர்தலில் தோல்வியுற்றாலும், இன்னும் 3 மாதங்களின் பின் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஷே மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார் என்ற நம்பிக்கை, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்றுவரை இருந்துவந்தது.
ஆனால், அரசியலில் மகிந்தவின் வலது கரமாக செயல்பட்ட பசில், இனி இலங்கையில் தலைகாட்ட மாட்டார் என்ற பேச்சு இன்று அடிபடுவதையடுத்து, ராஜபக்ஷே கூடாரம் பொல-பொலவென சரிந்துபோக வாய்ப்பு உள்ளது. தற்போது ராஜபக்ஷேவுடன் இருப்பவர்களும் எதிரணிக்கு எப்ப தாவுவார்களோ தெரியவில்லை.

No comments:

Post a Comment