Sunday, November 21, 2010

போர்குற்ற விசாரணைக்கு மனிதநேய நிறுவனத்துடன் சுவிஸ் ஈழத்தமிழரவை ஒப்பந்தம்

ஐ. நா. சபையினால் நியமிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீதான போர்குற்ற விசாரணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கும்படி கோரியிருந்த நிலையில், தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வேளையில் சுவிசில் உள்ள ஒரு மனிதநேய நிறுவனமான GfbV எனப்படும் Gesellschaft für bedrohte Völker அதாவது அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் நிறுவனம் தமிழர்களின் சாட்சியங்களை பதிவு செய்து உதவ முன்வந்துள்ளது.

பல நாடுகளில் தமிழ் அமைப்புக்களாலும் தனி நபர்களாலும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், சாட்சியங்கள் பக்கச்சார்பில்லாமல் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு GfbV எனப்படும் அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் மனிதநேய நிறுவனத்துடன் சுவிஸ் ஈழத்தமிழரவை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

பேர்ண் நகரில் எதிர்வரும் 28.11.2010 சனிக்கிழமை காலை 08:00 மணிமுதல் 12:00 வரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்தவர்கள் மாத்திரமே சாட்சியமளிக்கலாம். இதில் தனி நபர்களோ, அல்லது அமைப்புக்களோ வந்து நேரடியாக தங்களது சாட்சியங்களை பதிவு செய்யலாம்.

இது சார்ந்து மேலதிக விபரங்களை தமிழில் பெற்றுக்கொள்ள 078 744 59 60 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுங்கள். ஏனைய மொழிகளான யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஆங்கில மொழிகளில் விபரங்களை பெற politik-2@gfbv.ch என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.Share

No comments:

Post a Comment