Wednesday, November 17, 2010

எனது உடல் முழுவதும் குண்டின் சிதறல்கள்! மூன்று பிள்ளைகளுடன் விதவைத் தாயின் அவலம் (ஒலிப்பதிவுடன் கூடிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

எனது உடல் முழுவதும் எறிகணை வீழ்ந்து வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட காயங்கள். நான் இவ்வளவு காயங்களுடனும் எப்படித் தப்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை இப்படிக் கூறினார் யோகேஸ்வரன் லீலாவதி என்ற 3 பிள்ளைகளின் விதவைத் தாய்.






வன்னிப் போரில் சிக்கி சின்னாபின்னமாகி கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. வன்னிப் போரின் பின்னர் குடும்பத்தில் எஞ்சியுள்ளவர்கள் மூத்த மகள் றேணுகா(17 வயது), சாலினி( 10வயது) , மதுசன் (3 வயது).

அவர் தனது குடும்பத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கூறுகையில்

வன்னிப் பிரதேசத்தின் பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த நாங்கள் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்தோம்.

மாத்தளனில் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தேன். எனது கணவரும் இறந்துவிட்டார். காயங்களோடு துடிதுடித்துக் கொண்டிருந்த என்னை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு கூட எவரும் இல்லை.

எனது பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? புலிகளின் மருத்துவப் பிரிவினர் தான் வந்து காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தார்கள்.

கை, கால், கழுத்து, தொடை, வயிறு போன்ற உடலின் எல்லாப் பகுதிகளிலும் குண்டின் சிதறல்கள் பட்டு காயங்கள். வைத்தியசாலையில் எனது பிள்ளைகளைப் பிரிந்து பின்னர் தேடித்திரிந்து முகாமில் தான் அவர்களை சந்தித்தேன்.

தற்போது குமரபுரம் பரந்தனில் உள்ள மீள்குடியேற்றக்   கிராமத்தில் அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

கணவர் எறிகணைத்தாக்குதலில் உயிரிழந்து விட்டதால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது   லீலாவதியின் குடும்பம். இப்படி பெண்களே பொறுப்பேற்று நடத்தும் குடும்பங்கள் வன்னியில் ஏராளம்.

http://www.youtube.com/watch?v=0cCHSXL5_qw&feature=player_embedded

ஆசிரியர் குறிப்பு:  இக்குடும்பத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் 00447917870832 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டால் இக்குடும்பத்துடன் நேரடியாக உரையாடுவதற்கு வசதிகள்  ஏற்படுத்தித்தரப்படும்[/B]

No comments:

Post a Comment