Wednesday, December 15, 2010

பிரித்தானிய சட்டம் 151 மாற்றத்தால் நிகழப்போகும் அபாயம்: தமிழர்கள் என்ன செய்தார்கள்

பிரித்தானிய பாராளுமன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற விவாதமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது பிரித்தானிய கைதுசெய்யும் சட்டம் சரத்து 151 வது உறுப்புரையில் மாற்றத்தை ஏற்படுத்த பிரித்தானிய அரசு முயன்றுவருகிறது. குறிப்பாக போர்குற்றவாளிகளையும், வேறு நாடுகளில் குற்றம் இழைத்தவர்களை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய பிரித்தானியச் சட்டத்தில் இடம் உள்ளது. ஒருவர் மீது நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெறும் ஆணையை வைத்து அந் நபரைக் கைதுசெய்யமுடியும். ஆனால் அதனை மாற்றி நீதிபதி கைதுசெய்யச் சொல்லி உத்தரவிட்ட ஆணையை ரத்துச் செய்யும் அதிகாரத்தை அரச சட்டத்தரணிக்கு வழங்கம் புது முறையை உருவாக்க பிரித்தானிய அரசு முயல்கிறது.

குறிப்பாகச் சொல்லப் போனால் மிகவும் அனுபவமும், நீதியைக் காப்பாற்றும், மற்றும் நடு நிலை வகிக்கும் ஒரு நீதவான் வழங்கும் ஒரு ஆணையை ரத்துச் செய்யும் அதிகாரத்தை எவ்வாறு ஒரு தலைமை அரச வழக்கறிஞரிடம் கொடுப்பது என்ற கேள்வி இங்கே எழுகிறது. மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் வரை அவரை இந் நாட்டில் வைத்து கைதுசெய்ய முடியாது. ஆனால் அவருடன் வரும் இராணுவ அதிகாரிகளை நாம் கைதுசெய்யச் சொல்லி பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத் தொடரமுடியும். அவ்வாறு வழக்குத் தொடர்வதால் எமக்குக் கிடைக்கும் கைதாணையை ஒரு அரச தரப்பு தலைமை வழக்கறிஞரால் ரத்துச் செய்யமுடியும் என்ற நிலை தற்போது தோன்றவுள்ளது.

அதாவது இச் சட்டம் மூலம் அரசு தான் நினைக்கும் ஒரு யுத்தக் கைதியை தனது நாட்டில் வைத்து கைதுசெய்வதைத் தடுக்கிறது. இதன் பின்னணி என்ன ? எப்படி பின் லாடன் இரட்டைக்கோபுரத்தை தகர்க்க அதனால் உருவான சர்வதேச பயங்கரவாதம் என்ற சொல்பதத்தை மகிந்தவும் அவர் அரசும் பயன்படுத்தி புலிகளை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தி, பின்னர் பல நாடுகளில் அவர்களுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவந்து பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது போலவே இப்போதும் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது எனலாம்.

இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் பிரித்தானியா வரும்வேளை அவரைக் கைதுசெய்யுமாறு லண்டன் வாழ் பலஸ்தீனர்கள் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். இதனால் அவரைக் கைதுசெய்யும் பிடியாணையும் நீதிபதியால் வழங்கப்பட்டது. இதனை அடுத்து பிரித்தானிய அரசு பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தது. பின்னர் சில மாதங்கள் கழித்து வில்லியம் ஹேக் இஸ்ரேல் சென்றவேளை இஸ்ரேல் தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, பிரித்தானியாவிடம் இருந்து ஆயுதங்களை வாக்குவது குறித்தும் விற்பது குறித்தும் மறு பரிசீலனை செய்யப்படும் என எச்சரித்தது. இதனை அடுத்து அமைச்சர் வில்லியம் ஹேக் தாம் நிச்சயம் இதற்கு ஒரு முடிவுகட்டுவதாகக் கூறி நாடு திரும்பியதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியானதை மனிதன் இணையம் அறிகிறது.

இதனைத் தொடர்ந்தே இந்த அதிரடி சட்ட மாற்றம் நிகழவிருப்பதாக தொழில் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் மனிதன் இணையத்துக்குத் தெரிவித்தார். தற்போது நிகழவிருக்கும் மாற்றமானது தமிழர்களுக்கு பல எதிர்வினைகளைத் தோற்றுவிக்க உள்ளது. பிரித்தானியாவில் உள்ள பல பலஸ்தீன அமைப்புகள், இது தொடர்பாக தமது கடுமையான எதிர்ப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள எந்த ஒரு தமிழ் அமைப்பும் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றே கூறவேண்டும். தமிழர்களுக்ச் சார்பாக செயல்படும் பல பிரித்தானிய எம்.பிக்கள் இருக்கின்றனர், இவர்களைப் பயன்படுத்தி நடந்த பாராளுமன்ற வீவாதத்தில் கலந்துகொள்ளச் செய்திருக்கலாம். இல்லையேல் எமது எதிர்புகளை கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கலாம்.

இதுபோன்ற தவறுகளை இனியும் பிரித்தானியத் தமிழ் அமைப்புகள் விடக்கூடாது. இச் சட்டமானது நேற்றைய தினம் பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும், பின்னர் வாக்கெடுப்பு நிகழ்ந்ததையும் நாம் அறிகிறோம். இருப்பினும் இச் சட்டம் நிறைவேறியதா என்பது குறித்தும் இன்னும் உறுதியான தகவல்கள் மனிதன் இணையத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

No comments:

Post a Comment