Wednesday, December 08, 2010

நாடுகடத்தபடும் அகதிகள் சித்திரவதையுடன் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்கள்

சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் புகலிடம் கோரும் அகதிகள் சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவுஸ்ரேலிய அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்திருக்கிறார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது என அவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட 'Green Left Weekly' எழுதியுள்ளது.

அதன் செய்தியாளர் Lee Yu Kyung எழுதியுள்ள அந்த செய்திக் கட்டுரையினை புதினப்பலகைக்காக தி.வண்ணமதி மொழிபெயர்த்திருக்கிறார்.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

'அம்மா இறந்துவிட்டார்' என்றவாறு நாங்கள் அவரைச் சந்திப்பதற்காக முதல்தடவை சிறைச்சாலைக்குச் சென்றபோது இருண்டமுகத்துடன் இருந்த சுஜீந்திரன் குணசேகரம் எங்களை வரவேற்றார். கடந்த செப்ரெம்பர் 5ம் நாளன்று இவரது தாயார் மாரடைப்பினால் இறந்து விட்டார்.

27 வயதான சுஜீந்திரன் திருகோணமலையின் மூதூர் கிராமத்தினைச் சேர்ந்தவர்.

கடந்த ஒக்ரோபர் 2009ம் ஆண்டு இந்தோனேசியாவின் மொறாக் துறைமுகத்தில் நிறுத்த வைக்கப்பட்ட அவுஸ்ரேலியா நோக்கிப் புற்பபட்ட ஜெயா லெஸ்திறி என்ற படகிலிருந்த 254 புகலிடம் கோரும் அகதிகளில் இவரும் ஒருவர்.

அப்போதைய அவுஸ்ரேலியப் பிரமர் கெவின் ருட் இந்தோனேசியப் பிரதமர் சுசிலோ பொம்பாங் யுடொயொனோவினைத் தொடர்புகொண்டு கோரியதைத் தொடர்ந்து இந்தோனேசியக்
கடற்படையினர் இந்த அகதிகள் படகினை நடுக்கடலில் வைத்து இடைமறித்திருந்தனர்.

என்னவிலை கொடுத்தாயினும் அவுஸ்ரேலியாவிற்கு சென்றுவிடவேண்டும் என்றே சுஜீந்திரன் விரும்பினார். ஆனால் தனது தயார் சுகவீனமுற்ற நிலையில் கடந்த நவம்பரில் இவர் சிறிலங்காவிற்குத் திரும்புவதென முடிவெடுத்தார்.

"எனது தாயார் இவ்வளவு மோசமாக நோய்வாய்பட்டிருக்காவிடின் நான் சிறிலங்காவிற்குத் திரும்பியிருக்கமாட்டேன்" என்றார் அவர்.

எவ்வாறிருப்பினும் கொழும்பினை வந்தடைந்த சுஜீந்திரனால் நேரடியாகத் தாயாரிடம் செல்ல முடியவில்லை. தனக்கு இவ்வாறு ஒன்று இடம்பெறும் என்றே அவர் நினைத்திருக்கவில்லை.

'நாலாம் மாடிக்குக்' கொண்டுசெல்லப்பட்டார்

கொழும்புக்கு வடக்கே 37 கிலோமீற்றர் தொலைவில் நீர்கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சுஜீந்திரனின் கடவுச்சீட்டு நவம்பர் 26 2009 அன்று அதிகாலை ஒரு மணிக்கு சோதனையிடப்பட்டது.

சிறிலங்கா குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மூவரை குடிவரவு அதிகாரி அழைத்தார்.

அவர்கள் சுஜீந்திரனை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். நீ புலிதானே என அவர்கள் கேட்க அவர் அதனை மறுத்தார். அவர்கள் அந்த அறையைவிட்டு வெளியேற, மட்டக்களப்புத் தமிழ் பேச்சு வழக்குக்கொண்ட இன்னொருவர் மற்ற வாயிலூடாக நுழைந்தார். அவர் சுஜீந்திரனைத் தாக்க ஆரம்பித்தார்.

அவர் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்பது நிச்சயமானது என்றார் சுஜீந்திரன்.

கருணா குழுவானது சிறுவர்களைப் படையில் சேர்த்தல், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், தமிழ் மக்களையும் தமது விரோதிகளையும் கடத்துதல் முஸ்லிம்களைத் துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததாக 2009ல் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுஜீந்திரன்மீது அந்த மட்டக்களப்பு நபர் கத்தி கத்தி தாக்கினார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் விநியோகித்த ஐ.ஓ.எம் இனது பையை நீ வைத்திருக்கிறாய்.எனவே நீயும் அதனுடன் தொடர்புபட்டிருக்கிறாய், இல்லையா? என அவர் கேட்டார்.

தான் இந்தோனேசியாவிலிருந்து திரும்புவதற்கு ஐ.ஓ.எம் உதவியதாலேயே அந்தப் பையை வைத்திருப்பதாக சுஜீந்திரன் விளக்கினார்.

பல நிமிடங்கள் தொடர்ந்த தாக்குதலின் பின்னர் பச்சை ஜீப் வண்டி ஒன்றில் கண்கண் கட்டப்பட்டு அவர் ஏற்றப்பட்டார். "என்னைக் கொல்லபபோகிறார்கள் என நான் நினைத்தேன். ஆனால் நான் நான்காம் மாடியில் விடப்பட்டிருந்தேன்", என்றார் அவர்.

'நான்காம் மாடி' என்பது தமிழர்களின் மொழியில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவின் சித்திரவதை மற்றும் விசாரணைக்கான வதைகூடமாகும். பல டசின்கணக்கான விடுதலைப்புலி சந்தேக நபர்களை சுஜீந்திரன் அங்கு கண்டார்.

ஒரு வாரத்தின் பின்னர், அவர் பூசா முகாமுக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

தலைகீழாகக் கட்டப்பட்டு துவிச்சக்கர வண்டியின் பாகங்களாலும் குழாய்களாலும் தாக்கப்பட்டதாகக் கூறினார். அடியால் அவரது இடது கண் இன்றும் வேதனையாகவுள்ளது. ஆனால் அவர் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மறுக்கிறார்.

"எனக்கு என்ன நடந்தது என நான் அரச மருத்துவர்களுக்குக் கூறவிரும்பவில்லை. இதனை மருத்துவர்கள் அரசாங்கத்திடம் முறையிட மீண்டும் அவர்கள் என்னைக் கைது செய்வார்கள்", என்றார் சுஜீந்திரன்.

அவரிடம்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான வசதி இல்லாததால் ஒரு வருடத்திற்கு மேலாக கண் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

ஏனைய 30 கைதிகளுடன் சனவரி 2010ல் சுஜீந்திரன் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர்களுள் குறைந்தது இருவர் மீண்டும் போய்விட்டனர்.

யூலை மாத முற்பகுதியில் தான் கொழும்பில் வேலை செய்யுமிடத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து அவரை அழைத்தது முதல் தான் மீண்டும் அச்சமடைந்திருப்பதாக அவர் கூறினார்.

"தூரத்தில் அந்த பச்சை ஜீப்பைக் கண்டதும் நான் ஓடிவிட்டேன் அத்துடன் எனது கைத்தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டேன்", என தெரிவித்தார்.

மொறாக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து அகதிகள் படகலிருந்த இருவர் உள்ளிட்ட மூன்று அகதிகள் கடந்த ஒக்ரோபர் 6ஆம் நாளன்று சிறிலங்காவிற்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியதுடன் 'காணாமற்போனதாகவும்' பின்னர் 'நான்காம் மாடியில்' இருக்கிறார்கள் என செய்தி கிடைத்ததாகவும் இவர்களுடன் தொடர்புடைய ஒருவர் தகவல் தந்தார்.

சுகவீனமடைந்திருந்த தனது தாயாரைப் பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 17ம் நாளன்று பிரித்தானியாவினைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்காவிற்குத் திரும்பியபோது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தமிழ் ஊடகவியலாளரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற அரச வைபவமொன்றில் கலந்துகொண்டார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவருகின்ற போதும் கடந்த டிசம்பர் 1ம் திகதி வரை இவருடனான எந்தத் தொடர்பும் இல்லை.

"கடத்தப்படுவதற்காக, காணாமல்போக வைக்கப்படுவதற்காக அல்லது கொல்லப்படுவதற்காகவென்றே தடுப்பிலுள்ள சிலர் விடுவிக்கப்படுகிறார்கள். குறித்த ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டிருந்தால் அவர் தனது குடும்ப உறவினர்களையோ அன்றில் நண்பர்களையோ தொடர்புகொண்டிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் எவருக்குமே அந்த ஊடகவியலாளருடனான தொடர்பு இல்லை" என இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார்.

பிரித்தானியாவினைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர் காணாமற்போனமைக்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக கொழும்பிலுள்ள இன்னொரு செயற்பாட்டாளர் என்னிடம் கூறினார்.
திரும்பி வருபவர்களுக்கான 'உரிய நடவடிக்கைகள்' இது ஒருபுறமிருக்க, சிறிலங்காவுக்கான பிந்திய அறிவுறுத்தலை ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகம் யூலையில் வெளியிட்டிருந்தது.

"ஆயுதப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தொடர்பில்" அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறிருந்தும், "சூழ்நிலை இன்னமும் மாற்றமடைந்து வருவது இந்த அறிவுறுத்தலை வரைவதை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்பதை மனதில்கொள்ள வேண்டும்" என்பதை ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகம் ஏற்றுக்கொண்டிருந்தது.

இந்த 'சிக்கல்தன்மை' யின் ஒரு பகுதி முன்னேற்றமடைந்த சூழ்நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நாடு கடத்தப்பட்டவர்களையும் நாடு திரும்புவர்களையும் இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்துவதைக் குறித்து நிற்கலாம்.

சர்வாதிகார சிங்கள ஆட்சியாளர்களினால் சிங்கள மக்கள்கூட ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியமானது.

மேலும், ஐ.நா. உயர் ஆணையகத்தின் 'முன்னேற்றமடைந்த சூழ்நிலையில்' போருக்கு ஆதரவளித்த சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் ஆவிகளுடன் அரசாங்கம் தொடர்ந்தும் போரிடுவது பற்றியும் இங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

"விடுதலைப்புலிகள் எங்கிருந்து ஆயுத தளபாடங்களைப் பெறுகிறார்கள், அந்த அமைப்புக்காக எவ்வளவு பணத்தினைத் திரட்டிக்கொடுத்தேன்" போன்ற கேள்விகளையே தனது விசாரணையாளர்கள் தன்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டதாக சுஜீந்திரன் கூறுகிறார்.

இதுபோன்ற கேள்விகள் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் சுஜீந்திரன் போன்ற தமிழர்களிடம்தான் கேட்கப்படுகிறதே தவிர சுமித் மெண்டிஸ் போன்ற அகதி அஸ்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் சிங்களவர்களிடம் கேட்கப்படுவதில்லை.

01 ஒக்ரோபர் 200 அன்று அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து சுமித் என்ற சிங்களவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பியிருந்தது. விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட சுமித் பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் மீண்டும் அவுஸ்ரேலியா நோக்கிய கடல் வழியான பயண முயற்சியினை ஒழுங்குசெய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

"விடுதலைப் புலிகளமைப்பு அவுஸ்ரேலிய மண்ணில் மீண்டும் மீளுருவாக்கம் பெறும் வகையில் கடத்தற்காரர்கள் அவர்களை அவுஸ்ரேலியாவிற்குக் கடத்துகிறார்கள் என குற்றவியல் விசாரணைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்" என்கிறார் சுமித்தின் தாயார்.

"எமது குடும்பத்திற்கு முன்னால் வைத்து, அதுவும் எங்களது நான்கு வயது மகனுக்கு முன்னால் வைத்து சீ.ஐ.டீ யினர் எனது கணவனை அடித்தார்கள்" என சுமித்தின் மனைவி கூறுகிறாள்.

சுமித் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதன் பின்னர் மருத்துவ அறிக்கை ஒன்றைத் தருமாறு குறிப்பிட்ட சட்டவாளர் தாங்கள் கோரியபோதும் அவ்வாறு எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறுகிறான் சுமித்தின் சட்டவாளர்.

இதுபோல அவுஸ்ரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட லசந்த விஜயரத்தின என்ற சிங்களவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருந்தது எனக் குற்றம் சுமத்தப்பட்டது.
நவம்பர் 2009ம் ஆண்டு லசந்த அவுஸ்ரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இந்த ஆண்டினது முதற்பகுதி வரைக்கும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

"அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுப் பகுதியிலுள்ள தமிழ் அகதிகளுக்கும் தனக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி" குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தன்னிடம் விசாரித்ததாக தனது எழுத்துமூல முறைப்பாட்டில் லசந்த குறிப்பிட்டிருக்கிறார்.

"நீங்கள் ஒரு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என யாராவது உங்களை பெயரைக் கொடுத்திருந்தால் அங்கிருந்து நீங்கள் வெளியே வருவது மிகவும் கடினமானது. இதற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு எந்த விதமான ஆதாரங்களும் தேவையில்லை" என்கிறார் கொழும்பினைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர்.

2008ம் ஆண்டினது முதற்பகுதியில் லசந்தவினது மாமனார் தானறிந்த தமிழர் ஒருவரைத் தனது வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கவைத்தமைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டாம்நாளே அவர் இறந்துவிட்டார். தானறிந்த ஒருவரை விருந்தோம்பியதற்கான பரிசுதான் இது.

புகலிடம் கோரும் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதே தவிர, அவர்களைக் கடத்தும் வலையமைப்பு அவ்வாறே உள்ளது.

சிறிலங்காவிலிருந்து அதிக தொலைவில் இருக்கும் கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் தங்களது நாடுகளுக்கு புகலிடம் கோரிவரும் அகதிகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டினை எடுத்துவருகின்றன. இதுபோல ஆட்கடத்திலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார் எனச் செய்திகள் வெளிவருவது மிகவும் அரிதாகவே இருக்கிறது.

இருப்பினும் சிறிலங்காவினைச் சேர்ந்த புகலிடம் கோரும் அகதிகள் மோசமாக நடாத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.

சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையினை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வீதம் பெரிதும் குறைந்திருக்கிறது.

சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வீதமானது கடந்த ஓகஸ்ட்டில் 75 சதவீதமாக இருந்ததாகவும் அது செப்ரெம்பரில் 45 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றும் ரொறன்ரோ சண் கடந்த நவம்பர் 23ம் நாளன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஏப்பிரலில் சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் புகலிடக் கோரிக்கைகளை அவுஸ்ரேலியா அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு முழுமையாக நிறுத்தியிருந்தது.

கடல்வழியாக கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்காக பாங்கொக்கில் தங்கியிருந்த சிறிலங்காவினைச் சேர்ந்த 160 தமிழர்கள் கடந்த ஒக்ரோபரில் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு கற்பிணித் தாய்மார்கள், நான்கு வயதிற்கும் குறைந்த 2 மாதக் குழந்தை உள்ளிட்ட 18 சிறார்களும் இருக்கிறார்கள்.

இது தவிர ஒக்ரோபர் 30ம் நாளன்று தென் தாய்லாந்தின் சொங்கிலா பகுதியில் மேலும் 61 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் புகலிடம் கோரும் அகதிகள் சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவுஸ்ரேலிய அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்திருக்கிறார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

நான்காம் மாடியில் படையினர் தன்னைச் சித்திரவதைக்கு உட்படுத்தியபோது அவுஸ்ரேலிய உயர் ஆணையகத்தினைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்ததைத் தான் கண்டதாக உயர் நீதிமன்றத்திற்கு வழங்குவதற்காக சுமித் தயாரித்திருக்கும் முறைப்பாட்டில் கூறியிருக்கிறார்.

"ஆசியவைச் சேர்ந்தவராகத் தோற்றமளித்த அதிகாரி ஒருவர் குற்றவியல் விசாரணைப் பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கடல்சார் விசாரணைப் பகுதிக்கு வருகை தந்திருந்தார். நாங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோதும் அவர் அங்கிருந்தார். சித்திரவதையின் உச்சத்தில் நான் நிலத்தில் விழுந்ததை அவர் கண்டார். கிறிஸ்மஸ் தீவுப்பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவன்தான் நான் என்பதை அந்த அதிகாரி நன்கறிவார். இந்த விசாரணைப் பகுதிக்குப் புதிய குளிர்சாதனப் பெட்டி ஒன்றை அவர் அன்பாளிப்பாக வழங்கியதை நான் கண்டேன். நான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் இந்த அதிகாரி புதிதாக உருவாக்கப்பட்ட அந்த விசாரணைப் பகுதியிலேயே நின்றார்" என உயர் நீதிமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்காக சுமித் தயாரித்த முறைப்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றுக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் சட்ட மருத்துவ அலுவலர் ஒருவரின் மருத்து அறிக்கைக்காக சுமித்தின் சட்டவாளர் காத்திருக்கிறார். கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஆணையகத்தினது அதிகாரிகளுடனான நேர்காணலை நடாத்துவதற்கான வேண்டுகையினை கடந்த செப்ரெம்பரில் நான் கோரியிருந்தேன்.

கொழும்பிலுள்ள அதிகாரிகள் எவரும் ஊடகங்களுக்குச் செவ்வி வழங்குவதில்லை என்றும் தங்களது வெளிவிவகார அமைச்சினைத் தொடர்புகொள்ளுமாறும் அவர்கள் என்னிடம் கூறினர்.

சுமித்தினது இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான எங்களது கேள்விக்கு இதுவரை கன்பராவிலுள்ள வெளி விவகார அமைச்சு பதிலளிக்கவில்லை.

பலதரப்பட்ட காரணங்களுக்காக சிறிலங்காவினைச் சேர்ந்தவர்கள் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருகிறார்கள். சிலர் உயிருக்கு அஞ்சி இங்கு செல்கிறார்கள். வேறு பலர் தங்களது பொருளாதாரம் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் 'பொருளாதார மேம்பாட்டுக்கு' என்றே சிறந்த வாழ்வினைத் தேடிச் செல்கிறார்கள்.

ஆனால் இவர்கள் திருப்பியனுப்பப்படுமிடத்து மிக மோசமான ஆபத்தினை எதிர்கொள்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கமானது இவ்வாறு மோசமாக நடந்துகொள்வதானது பல அகதிகள் ஆபத்து நிறைந்த பயணத்திற்கு முகம்கொடுத்து சிறிலங்காவிலிருந்து வெளியேற முனைவதற்கே வழிசெய்யும்.Share 

No comments:

Post a Comment