Sunday, December 19, 2010

இது பரபரப்பு அல்ல! எதிர்பார்க்கப்பட்டதுதான்!! - பார்த்திபன்

பெரிய ஒரு துரோகத்தின் கூட்டுச்சதியால் எமது இனத்தின் விடுதலைப்போராட்டம் பின்னடைவை சந்தித்தபோது யார்தான் எம்மை தறிப்பதற்கு எதிரியின் கோடரிக்கு கம்பாக, கைபிடியாக இருந்தார் என்பது வெளிச்சமாகிவரும் இந்நிலையில், அவருடன் இந்த சதியிலும், துரோகத்திலும் கூட்டுநின்ற மாயமுகங்கள் இப்போது மெதுமெதுவாக முகம்காட்டிவருகின்றன.

சிலமுகங்களின் சாயம் வெளுத்தும் வருகிறது. கைவிரல்களுக்குள் எண்ணிவிடக்கூடிய தொகையான இந்தப்பிறப்புகளின் முகங்களை ஈழத்தமிழினம் மட்டும் அல்லாமல் விடுதலைக்காக இப்போது போராடிக் கொண்டும், இனிப் போராடப்போகும் இனங்கள், தேசங்களின் மக்களும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களில் இறுதியாக தன்னை தோலுரித்துக்காட்டிய அந்த பரபரப்பான பத்திரிகையாளரின் பேட்டியை கேட்டபோது ‘நீயுமா புரூட்டஸ்’ என்ற சீசரின் வியப்பு ஏனோ எமக்கு எழவில்லை.

ஏனென்றால் இவர் இப்படிச்செல்வார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதோ
முறிகண்டிக்குள் மறித்து அடிக்கப்போகிறார்கள். அதோ! கடல்வழியாக பெருந்தாக்குதல் ஒன்றை நடாத்தி முற்றுகையை உடைக்கப்போகிறார்கள் என்று புலுடா பரபரப்புவிட்டுக் கொண்டிருந்தவுருக்கு இப்போ பத்திரிகை எதுவும் ஓட்டமுடியாமல். உழைப்பு படுத்துவிட்டது.

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பதுபோல, இப்படியானவர்கள் ஓடிப்போய் விழும் இடம் சிறீலங்கா இனவெறி அரசிடம்தானே. இங்கிருந்துபோய் கொழும்பின் இரவு நேர கேளிக்கைகளிலும், மகிந்த சகோதரர்களின் உபசரிப்பிலும் புளகாங்கிதம் அடைந்து, பேறுபெற்று, மீண்டும் திரும்பி புலத்துக்கு வந்து அங்கு கொடுத்தவைகளை இங்கு வாந்தி எடுத்து இருக்கிறார்.

அதுவும் எப்படி..?

முருகதாசனின் தற்கொடை தேவையில்லாததாம்!

மாவீரர் நினைவு நிகழ்வுகள் இனிமேல் நடாத்தக்கூடாதாம்!!

தேசியத்தலைவர் நிறைய பிழைகள் விட்டுவிட்டாராம்!!! என்று இப்போது மனந்திறந்திருக்கிறாராம்.

இவ்வளவு காலமும் இவர் மனதை யார்தான் அடக்கி வைத்திருந்தார்கள். இவர் மனதை திறப்பதற்கு சிங்கள அரசு தனது கஜானாவை திறந்து கொட்டி, இங்கு வந்து வானொலியிலும், தொலைக்காட்சியிலும் வாந்தி எடுக்கவைத்துள்ளது. டி.பி.எஸ்.ஜெயராஜ்யை வைத்து பேட்டி அது இது என்று எழுதிக்கொட்டி ஒரு அடிபணிவு அரசியல் சித்தாந்தத்தை தமிழ்மக்கள் மத்தியில் திணிக்கமுயன்று தோற்றவர்கள் இப்போது இந்த பரபரப்பு எழுத்து வியாபாரியை எமக்குள் அனுப்பி இருக்கிறார்கள்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போலவே தேசியத்துக்கு எதிரான கருத்துகளை பரப்பும் இவரின் ஊடகத்தை மக்கள் நிராகரிக்கவேண்டும். மகிந்தவுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை புலம்பெயர் தமிழ் சமூகம் செய்யவேண்டும் என்ற நச்சுக்கருத்தை இவர் பரப்புவதன் காரணம் மகிந்தரை யுத்தக்குற்றங்களில் இருந்து காப்பாற்றும் நோக்கம் கொண்டது. இவரைப்போன்றவர்களை இனங்கண்டு நிராகரிப்பது ஒன்றுதான் இவர் காவித்த்திரியும் போர்க்குற்றவாளிகளுக்கு நாம் கொடுக்கும் எதிர்ப்பாகும்!!

No comments:

Post a Comment