Sunday, December 19, 2010

நடேசன், ரமேஷ் கொலை - ஐ.நா நிபுணர் குழுவிடம் சாட்சியங்கள்!

இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க் குற்ற ஆதாரங்கள் பலவற்றையும் திரட்டிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவற்றை உள்ளடக்கிய மனுவொன்றை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ளது. இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர் மற்றும் உறவினர்களிடமிருந்து பல போர்க் குற்ற ஆதாரங்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்குக் கிடடத்துள்ளன. வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றபோது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மகன் அளித்த வாக்குமூலமும் மேற்படி மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கேணல் ரமேஷின் மனைவி அளித்துள்ள சாட்சியமும் ஐ.நா நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேணல் ரமேஷ் ஏற்கனவே போரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையில், ரமேஷை இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தும் வீடியோ கிளிப் அண்மையில் வெளியாகியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் உடைத்து அழித்தமைக்கான சாட்சியங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களை உடைப்பது சர்வதேச சட்ட மீறல் என்பதால் இதுகுறித்து நிபுணர் குழு கவனத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர்களின் உறவினர்கள், குடும்பத்தவர்களிடமிருந்து பெற்ற சாட்சியங்களை அளித்துள்ளது.

No comments:

Post a Comment