Wednesday, February 09, 2011

9ஆவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம்.

சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து விடுதலையை வலியுறுத்தி ஈழத் தமிழர் 4 போ 9ஆவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம்.


 
1 இலட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமி ழர்கள் படுகொலையை தடுக்கத் தவறிய நாம் இந்த 4 பேரையும் பலியிடப் போகிறோமா?

 
      ஈழப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என தான் சந்தேகிக்கும் எந்த ஈழத் தமிழரையும் அவர்கள் மீது வழக்கு எதுவும் இல்லாவிட்டாலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது தமிழக அரசு. வழக்கு இல்லாவிட்டாலும், வழக்கில் பிணையில் வெளிவந்த நிலையிலும், விடுதலை அடைந்த நிலையிலும் அவர்களை க்யு பிரிவு காவல்துறையின் ஆலோசனையின் பேரில் சிறப்பு முகாமில் அடைக்கிறது தமிழக அரசு. அவ்வாறு அடைக்கப்பட்டவர்களில் பலர் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என எந்தக் காரணமும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
       
இந்த சிறப்பு முகாம் என்ற சிறையை முடிவுக்கு கொண்டுவந்து எல்லோரையும் சாதாரண திறந்தவெளி முகாமிற்கு அனுப்பக்கோரி பலமுறை பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
      கடந்த 2009இல் செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் தங்களை சாதாரண முகாமிற்கு அனுப்ப வேண்டும் அல்லது பல ஆண்டுகளாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள தங்கள் வழக்கை உடனே விசாரணையை முடித்து சிறைக்கு அனுப்பு அல்லது விடுதலையானால் தாங்கள் விரும்பும் நாட்டிற்குச் செல்ல அனுமதி வழங்கு என சாகும்வரை உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தினர். அவர்களின் அந்தப் போராட்டம் 10 நாட்களுக்குப் பின்புதான் அரசால் பார்க்கப்பட்டது. அப்போது சிலரை மட்டும் வெளியேவிட்டனர். மற்றவர்களின் வழக்குகளில் 1 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையை உடனே முடிக்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டது.
ஆனால் உண்ணாவிரதம் முடித்த சில நாட்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்ளை எந்தவித காரணமும் இல்லாமல் கொடூரமாக காவலர்களைக் கொண்டு தாக்கியது தமிழக அரசு. அவர்கள் மீது பொய்வழக்கும் போட்டது. அவர்களை உறவினர்கள், வழக்கறிஞர்கள் பார்ப்பதையும் தடுத்தது தமிழக அரசு. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குபபின்பு தான் உறவினர்கள், வழக்கறிஞார்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் சிறையைப் போல் கம்பிக்கு வெளியே இருந்து பேச மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
     
பல ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிக்கைக்கூட தாக்கல் செய்யப்படாமல்  இருக்கும் தங்கள் மீதான வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் அல்லது தங்களை வெளி முகாமிற்கு அனுப்ப வேண்டும் என கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் பூந்தமல்லி சிறப்பு முகாமிலும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த வாரம் தொடங்கினார்கள். 5 நாட்களுக்குப்பின் பலரின் உடல்நிலை மோசமானதால் சிலரை மட்டும் சிறப்பு முகாமிலிருந்து வெளியே விட்டது தமிழக அரசு. ஆனால் இன்றுவரை 9ஆவது நாளாக உண்ணவிரதம் இருந்து உடல்நிலை மோசமாகிவரும் சந்திரகுமார் என்ற மாஸ்டர், கங்காதரன் என்ற முத்தண்ணா, செயமோகன்,அமலன் ஆகியோரை வெளியேவிட மறுக்கிறது. இவர்கள் பல்வேறு காலங்களில் சிறப்பு முகாமிலிருந்து வெளியேவிடக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைத்ததாலும் செங்கல்பட்டு முகாமில் தங்களை கொடூரமாகத் தாக்கிய காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்ததாலும், காவல்துறை விசாரணையின்போது உளவுப்பிரிவு காவலர்களின் பொய்களுக்கு சாட்சியாக இருக்க மறுத்தாலும் . . . இதற்கெல்லாம் சேர்த்து இவர்களை வெளியேவிடாமல் பழிவாங்கி வருகிறது தமிழக அரசு.
      
 9 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் அவர்களின் உடல்நிலை மிக மோசமடைந்துவரும் நிலையிலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரையும் அனுப்பாமல் அவர்களின்  உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
      நான்கு பேரில் அமலன் தூக்க மாத்திரைகளையும் வேறு மாத்திரைகளையும் அதிகமாகச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
      ஈழப் போராட்த்தில் தம் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளை சிங்கள இராணுவம் கொடூரமாகப் படுகொலை செய்து தனது கோரப் பசிக்கு இரையாக்கியது. ஈழப் போராட்டத்திற்கு துரோகம் செய்து 1 இலட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணைபுரிந்த தமிழக அரசு இன்று சந்திரகுமார், கங்காதரன், செயமோகன், அமலன் ஆகிய நான்கு பேரும் அணுஅணுவாகச் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
       
1 இலட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்களின் படுகொலையை வேடிக்கை பார்த்த நாம் பூந்தமல்லி சிறப்பு முகாமில் 9ஆவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் சந்திரகுமார், கங்காதரன், செயமோகன், அமலன் ஆகிய நான்கு பேரின் மரணத்தையும் நாமும் வேடிக்கைப் பார்க்கப் போகிறோமா?

  
வழக்குரைஞர்கள், சட்ட மாணவர்கள் - மதுரை

No comments:

Post a Comment