நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நோர்வே ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக எரிக் சொல்ஹெய்;ம் இந்த சந்திப்பினை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செய்வதற்கும், காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் புலம்பெயர் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியமானது என நோர்வே அமைச்சர் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படுத்த துணை புரியத் தயார் என நோர்வே அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.