Monday, May 09, 2011

கேள்வி? நாடு கடந்த தமிழீழ அரசு உலகதமிழர் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

pr1கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி வழிநடத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உலகம் தவறான வகையில் புரிந்துகொண்டு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது.

தாயகத்தில் ஏற்பட்ட அந்தப் பின்னடைவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்ததன் பின்பான காலகட்டத்தில், தற்போதைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழ்மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தாயகத்திலும் சரி, உலக மட்டத்திலும் சரி, இவ்வாறான ஜனனாயக அமைப்புக்களின் செயற்பாடுகள் தற்போதைய காலகட்டத்தில் தேவையானவையே.
நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் புலம்பெயர் தமிழ் மக்களிடத்திலும் உலக நாடுகள் மட்டத்திலும் எமது தாயக விடுதலைக்காகச் செயற்பட வேண்டியவை.
தமிழீழ மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இன்றும் தமிழீழத்திற்கு வெளியே வாழ்ந்துவருகின்றனர். தமிழீழத்து மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களும் பெரும்பங்கை வகிக்கின்றனர்.
அந்தவகையில் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை சரியவிடாது அதன் அரசியலுரிமையை தக்கவைக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் என்பது முக்கியமானதாகும்.
அதேவேளை உலகத்தமிழர் பேரவை என அழைக்கப்படும் ஜரிஎப் ஆனது பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் தனது கிளை அமைப்புக்களை கொண்டுள்ளது.
இவ்வமைப்பானது தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளை வெளியுலகுக்கு கொண்டுசெல்லும் அமைப்புகளாகவும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி விடயத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அவசியத்தை வலியுறுத்துவனவாக செயற்படுகின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசும் உலகதமிழர் பேரவையும் இரண்டு வெவ்வேறு சமாந்தரமான பாதைகளில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பயணிக்கின்றன.
இதேவேளை தாயகத்திலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மக்களின் பெருமளவான ஆதரவினால் இன்றும்கூட தமிழரின் பிரதிநிதிகள் என்ற நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நடைமுறை அரசியல் என்ற கோட்பாட்டோடு அவர்கள் செயற்படுவது சரியா தவறா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அதேவேளை, கொள்கையில் உறுதியாகவும், எமக்கான அரசியல் தீர்வு என உயர்ந்தபட்சக் கோரிக்கையொன்றைக் கொள்கையாகக் கொண்ட ஓரணியும் தாயகத்தில் இருப்பது அவசியமானது.
சிறிலங்கா அரசாங்கத்தின் சூழ்ச்சித்தனமான அபிவிருத்தி அரசியலில் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தால் எமக்கு எஞ்சப் போவது வெறும் பிச்சைப்பாத்திரம் மட்டுமே என்பதனையே போருக்கு பின்னரான கடந்த இரண்டு வருடங்கள் நிருபித்துள்ளன.
எனவே, ‘ஒரு நாட்டில் இரு தேசங்கள்’ என்ற கோரிக்கையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் அசைவுக்கு முக்கியமான உந்துசக்தியே.

- ஈழநேசன் ஆசிரியர்பீடம்

No comments:

Post a Comment