
சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது அல்லது அதனை வலுவிழக்கச்செய்வதற்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக சிறீலங்கா அரசு சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது புலம்பெயர் தமிழ் மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் கொண்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச் செய்யும் முகமாக பல போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தயாரிப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த படையணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
அதாவது போலியான காணொளிகளையும், புகைப்படங்களையும் எடுத்து அதனைத் தமிழர்கள் ஊடாக இணையங்களிலும், மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலில் உலவவிடுவது. பின்னர் அதனை இலகுவாக போலியானவை என நிரூபித்து தற்போது முன்னெடுக்கப்படும் போர் குற்ற விசாரணைக்கான முனைப்புகளை முறியடிப்பதற்கும், மற்றும் விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்ததாக காணொளிகளையும் புகைப்படங்களையும் எடுத்து வெளிவிடுவதன் மூலம், போர்குற்ற விசாரணைகளை திசைமாற்றவும் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசு.
இதனைச் செயலாளர் கோத்தபாயா ராயபக்ஷ உருவாக்கியுள்ளதுடன், அதனை பனாங்கொட இராணுவமுகாமில் இயக்க அவர் முடிவெடுத்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் முகமாக மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து தனியார் நிறுவன நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கணணிகளின் உதவியுடன் புதிதாக உருவாக்கப்படும் புகைப்படங்களையும் காணொளிகளையும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் விநியோகம் செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் சிறீலங்கா உளவாளிகளை பயன்படுத்த சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன அடங்கிய யு.எஸ்.பி சேமிப்பு கருவி, செல்லிடத் தொலைபேசிகள் என்பனவற்றுடன், சில முகவர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதனைப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்பதோடு, பின்னர் அதனை இலங்கை அரசு போலியானது என நிரூபிக்கவும் உள்ளதாக இரகசியத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒருசில புகைப்படங்களை சில தமிழ் இணையங்களுக்கு இலங்கை புலனாய்வுத்துறை இலவசமாக அனுப்பியுள்ளது. இருப்பினும் அவை போலியானவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் இந்த நடவடிக்கையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் நிறுவனமும் இயங்கி வருகிறதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. ஏன் எனில் அதன் அதிகாரிகள் அண்மையில் பல தடவைகள் சிறீலங்காவுக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் சமீபத்தில் இலங்கை சென்று வந்துள்ளனர். இவர்களை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் கோத்தபாயா ராஜபக்சாவும், நமால் ராஜபக்சாவும் இணைந்து ஆடம்பர விருந்து உபசாரம் ஒன்றையும் ஒழுங்குசெய்திருந்தனராம். அங்கு வந்தவர்களுக்கு அழகிய பெண்களும் இலவசமாக வழங்கப்பட்டது என ஆங்கில ஊடம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment