Friday, May 27, 2011

இறுதிப்போரிலும் இராணுவத்தின் ஊழல் மோசடிகள்: அம்பலம் !

27 May, 2011 by admin
சர்ச்சைக்குரிய வெள்ளைக்கொடி வழக்கு சரத்பொன்சேகாவுக்கு எதிராக நடைபெற்று வரும் நிலையில், அவர் நீத்மன்றில் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடியானது மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி எனவும் இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடியெனவும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணை ஷெல்களை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்தியது ஆகும். அக் கப்பல் புறப்படுவது குறித்து புலிகள் எவ்வாறு அறிந்தனர் என்பதில் சூழ்ச்சி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்பது தெரியவந்தது. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலுவத்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தேசிய மாணிக்கக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமித்தார். இதனைத் தவிர இரண்டாவது பாரிய மோசடியானது பிரித்தானியாவிடமிருந்து சீ 130 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியுடன் நிதியைப் பெற்று அந்தப் பணத்தில் இரண்டு விமானங்களை மாத்திரம் கொள்வனவு செய்த மோசடியாகும்.

இதன்போது 90 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டதாக கணிக்கிடப்பட்டிருந்தது. இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடியை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போதைய ஜனாதிபதி நியமித்தார். அதேவேளை, இலங்கை கடற்படையின் டோரா தாக்குதல் படகிற்காக 30 மில்லிமீற்றர் ஆயுதக் கட்டமைப்பொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் 76 கோடி மோசடி செய்யப்பட்டது இதுகுறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் தயா சந்தகிரியை குற்றவாளியெனப் பெயரிட்டது. எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சந்தகிரியை இலங்கை பொசுபேட் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார்.

இவ்வாறு போர் குற்றம் புரிந்த பலரையும், ஊழல் செய்த அதிகாரிகளையும் மகிந்த வெளிநாட்டு தூதுவர்களாகவும் பொறுப்புவாய்ந்த பதவிகளிலும் அமர்த்திவருகிரார். இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பலகோடி ரூபாயில் கோத்தபாயவுக்கு பெரும் பங்கு உண்டு எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment