காரணம் ஜெயலலிதா என்ற அம்மையாரின் அ.தி.மு. க பெற்ற வெற்றி என்பது மட்டும் அல்ல. மாறாக அநீதிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பு என்றே நாம் பார்க்கின்றோம்.
“உலகம் நீதியை அல்ல அநீதியைத்தான் அதிகம் நேசிக்கின்றது”. முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் குண்டு வீசி குதறப்பட்டபோதும் குற்றுயிராய் மண்புழுதியில் கிடந்து மன்றாடியபோதும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உலகம் முன்வரவில்லை. அந்த உறவுகளுக்கு ஆறுதல் தரும்படியான வார்த்தைகள் எதையுமே பேசவில்லை.இந்த நிலையில், அந்த மக்களையும் போராளிகளையும் நாம் இழந்து இரண்டு வருடங்கள் கடந்த சோகத்தை மீண்டும் அனுஷ்டிக்கும் இந்த மே மாதத்தில் எமக்கு நம்பி;க்கை ஊட்டக்கூடிய சில விடயங்கள் அரங்கேறுகின்றன என்பதை நாம் அவதானிக்கின்றோம்.
ஆமாம் மே மாதம் 13ம் திகதி தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மிகவும் அமைதியாக வெளிவந்தன. அமைதியோடு வெளியான அந்த முடிவுகள் சில மணிநேரத்திற்குள் உலகெங்கும் பல எழுச்சி அலைகளை ஏற்படுத்திவிட்டன.
காரணம் ஜெயலலிதா என்ற அம்மையாரின் அ.தி.மு. க பெற்ற வெற்றி என்பது மட்டும் அல்ல. மாறாக அநீதிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பு என்றே நாம் பார்க்கின்றோம். ஆமாம் அநீதிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம் அங்கு ஆரம்பமாகிவி;ட்டது என்று நாம் மீண்டும் கூறுகின்றோம்.
தமிழ்நாட்டில் அங்குள்ள தமிழ் மக்கள் அநீதி;யை எதிர்த்து வாக்களித்தன் மூலம் பல விடயங்களை சாதித்துள்ளார்கள். ஆமாம் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் இருப்பைக் கலைத்துள்ளார்கள். குடும்ப ஆதிக்கம் என்ற போர்வையை தமிழ்நாட்டில் உடலிலிருந்து அகற்றி தூரத்தே வீசியுள்ளார்கள்.
இந்த அரசியல் மாற்றமானது நமது ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் ஒரு நல்ல ஆரம்பம் என்றே நாம் கருதுகின்றோம். செல்வி ஜெயலலிதாவின் வெற்றியானது எவ்வாறு நமது ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல ஆரம்பம் என்று பலர் யோசிக்கலாம்.
ஆமாம் அன்பர்களே! ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றவுடன் மறுநிமிடமே இலங்கைத் தமிழர்கள் சுகமாகவும் சுயமாகவும் வாழ நான் வழிசமைப்பேன் என்று தெளிவாகச் சொன்னார் அவர். அதன் பின்னர் “இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சாவை போர்க்குற்றவாளியாக்கி அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன்” என்று பகிரங்கமாகக் கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது “தமிழ்நாட்டில் ஜெயலலிதா வெற்றி பெற்றது இலங்கைக்கு ஒரு தலையிடியாக இருக்காது. மத்திய அரசு எங்கள் கைகளில்…” என்றது அந்த அறிக்கை.
ஆனால் நேற்று என்ன நடந்துள்ளது பாருங்கள். இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அறிக்கை விடுகின்றார். “தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவோடு இலங்கை அரசு நேசக்கரம் நீட்ட விரும்புகின்றது” என்று.
ஆகவே தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் இலங்கையின் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஜெயலலிதா அம்மையாரின் போக்கில் எவ்வகையான மாற்றங்களும் ஏற்படலாம். ஆனால் தமிழ் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பி;க்கை நமக்கு உள்ளது.
காரணம் அங்கும் பல தலைவர்கள் தமிழ் இன உணர்வோடு இன்னும் பணியாற்றி வருவதும் நமது ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதையும் பார்க்கின்றோம்.
தோல்வி என்னும் பள்ளத்தாக்கில் விழுந்துள்ள கருணாநிதியும் அவரது குழுவினரும் அடைந்த படுதோல்விக்கான காரணமே அவர்கள் நீதியை புறக்கணித்தார்கள். முழுதாக தங்களை நம்பியிருந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் அவர்களின் தலைவர்களையும் கைவிட்டார்கள்.
இந்த நியாயமில்லாத கலைஞரும் அவரது குழுவினரும் தமிழ்நாட்டை மட்டுமலல முழு இந்தியாவையுமே நடுங்க வைக்கும் ஊழலில் ஈடுபட்டார்கள். அதற்கு தமிழ் நாட்டு மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.
கருணாநிதியின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.இது தவிர முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் வரலாறு காணாத வகையில், மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது. முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகிரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.
அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இது வரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோன் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினி மாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம்.
பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையும் தி.மு. க..வின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. உலகத் தமிழர்கள் அனைவரும், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப் பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்த தெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்து தமிழ் மக்களை அவமதித்தார் கருணாநிதி.
ஆமாம் இவ்வாறு பல்வேறு வகையான அநீதிகளுக்கு துணை நின்ற கருணாநிதியை அகற்றி விட்டு தங்களுக்கு நீதியான ஆட்சியைத் தாருங்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்டுள்ளார்கள்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆரம்பமாகியுள்ள அநீதிக்கு எதிரான போராட்டத்தை நமது தமிழ் மக்களும் நன்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நமது தாயகத்தில் நமது உறவுகள் நிம்மதியாக உறங்குவார்கள். உண்டு களிப்பார்கள் அப்போதுதான் உலகத்தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
கனடா உதயன்
No comments:
Post a Comment