First Published : 01 Jun 2011 01:47:30 AM IST
Last Updated : 01 Jun 2011 05:13:37 AM IST
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னைகளைச் சந்தித்துவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடவடிக்கைக்கு மேலும் கடிவாளம் போடும்படியாக இன்னொரு தீர்ப்பை அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. தொழில்வளர்ச்சிக்கென 170 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய மாநில அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக்காட்டி, ரத்து செய்துள்ளது.இந்த வழக்கில் 100 விவசாயிகள் ஒன்று சேர்ந்து உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றது போல, எல்லா விவசாயிகளும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியது.இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண, நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா, குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆனால், இந்தத் திருத்த மசோதா, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.நிலம் கையகப்படுத்தும்போது, அது விவசாயியாக இருந்தாலும், சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், அரசுக்குத் தர மறுப்பதன் முதல் காரணம், அவர்கள் அந்த நிலத்துக்குத் தரும் விலை அடிமாட்டு விலையாக இருப்பதுதான். அரசு குறிப்பிடும் சந்தை மதிப்பு விலைக்கும், நடைமுறையில் தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலைக்கும் உள்ள இடைவெளி பல மடங்காக இருக்கும்போது, தாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். நிலத்தை வழங்க மறுக்கிறார்கள்.மக்கள் இவ்வாறு நிலத்தை வழங்க மறுத்து, நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறும்போது, அரசின் திட்டம் மேலும் சில ஆண்டுகள் தள்ளிப்போகிறது என்பதால், அரசு நிர்வாகம் இந்த நிலம் கையகப்படுத்துவதை ""இன்றியமையா பொதுக்காரியம்'' என்பதாக அறிவித்து, அதற்கான சட்டவிதியின் கீழ் நிலத்தை எந்தக் கேள்விக்கும் மறுப்புக்கும் இடம் ஏற்படாதபடி கையகப்படுத்தும் உத்தியைக் கையாண்டு வருகிறது.மக்களுக்குத் தேவையான சாலை அல்லது ஒரு துணை மின்நிலையம் அமைத்தல் போன்ற இன்றியமையாப் பொதுநலப் பணிகளுக்காக நிலத்தை அரசு கையகப்படுத்தினால், அதை மக்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இதை ஏதோ ஒரு தனியார் நிறுவனத்துக்காக அரசு கையகப்படுத்தி தாரை வார்க்கப்போகிறது எனத் தெரியும்போது பெரும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடிக்கின்றன. குறிப்பாக, இந்த நிலத்தைக் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் இந்த நிலத்துக்குக் கிடைத்த பணத்தைவிட அதிக அளவு லஞ்சம் பெறவுள்ளனர் என்ற தகவல் பரவும்போது, கோபம் மேலும் அதிகமாகிறது. இந்தக் கோபங்கள் நியாயமானவை.பெரும் தொழில்நிறுவனங்களுக்கு நிலம் வாங்கித்தரும் முகமை அமைப்புகளாக (நோடல் ஏஜன்சி), சில அரசியல்வாதிகளின் தயவில் செயல்படும் நிறுவனங்கள், 300, 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமிருந்து மிரட்டி வாங்கி, விற்கும்போது பெறும் கமிஷன் தொகையே மொத்த நிலத்துக்குக் கொடுத்த தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்கிறபோது, நிலம் கையகப்படுத்துவதில் எத்தகைய மோசடிகள், ஊழல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை விவரிக்க வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக, பெருநகரையொட்டி இருக்கும் பகுதிகளில் இந்த மோசடிகள் மேலதிகமாக நடக்கின்றன.பொதுக் காரியத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது, சந்தைவிலை என்று மிகக் குறைந்த விலையை வழங்கும் வழக்கத்தை அரசு கைவிடவேண்டும். இது பிரிட்டிஷ் கால நடைமுறை. அதையே இப்போதும் கையாள்வது அர்த்தமற்றது. இன்றைய தேதியில் வெளிச்சந்தையில் நிலவும் பொதுவான விலைக்கேற்ப, விவசாயிகளிடம் பேசி, அவர்கள் விருப்பத்துடன் விலையைத் தீர்மானிக்கும் நிலைமை உருவாக வேண்டும். விவசாயியின் நிலம் ஒரு முதலீடு என்பதால், அதன் மூலம் அவர் ஆண்டுதோறும் பெறும் வருவாயைக் கணக்கிட்டு அதற்கேற்ப அந்த நிலத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்த நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என்றால், அங்கே அமையவிருக்கும் தொழிற்கூடத்துக்கு ஏற்ப விலையை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். இயற்கை வளங்கள் உள்ள பகுதிகளைக் கையகப்படுத்தும்போது எத்தகைய இழப்பீடு மற்றும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது குறித்து, அசோக் சாவ்லா கமிட்டி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. இதில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்காக அல்லது நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களை எடுப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது, அந்தத் தொழிற்கூடங்களின் மதிப்புக்கு ஏற்ப இந்த நிலத்தின் மதிப்பு எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும் என்கிற அட்டவணையை, ஒரு ஃபார்முலாவை இந்தக் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது. இதே பரிந்துரைகளை விவசாயிகளின் நிலத்தை தொழிற்கூடங்களுக்காகக் கையகப்படுத்தும்போதும் அமல்படுத்த வேண்டும். மழைக்காலத் தொடரில் அறிமுகம் செய்யவுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவில், இத்தகைய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலம் கையகப்படுத்துதல் (வழக்குகளுக்கான) நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நடுவர் மன்றங்கள் தேவைதான். ஆனால், விவசாயி, சாதாரணக் குடிமகனுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் விலைநிர்ணயம் செய்வதற்குச் சட்டத்திருத்தம் முறையாக அமையாவிட்டால் நடுவர் மன்றம் மட்டுமே போதாது.
No comments:
Post a Comment