Friday, June 03, 2011

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இன்று காட்சிப்படுத்தப்படவுள்ள "சிறிலங்காவின் கொலைக்களம்" என்னும் ஆவணப்படம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சனல் 04  தொலைக்காட்சி ஊடகத்தினால் இன்று காட்சிப்படுத்தப்படவுள்ள இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தின் தலைப்பு "சிறிலங்காவின் கொலைக்களம்" என்பது தான் 


ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும், இந்தப் போர்க்குற்ற ஆவணப்படம் ஒரு மணி நேரத்துக்கு ஓடுகிறது. சரணடைந்த தமிழ்க் கைதிகள் ஆயுதப் படைகளால் சுடப்படும் காட்சிகள் இதில் முதலில் காண்பிக்கப்படும்.
செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04  தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை காண்பத்திருக்காத மிகவும் பயங்கரமான காட்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் சேர்த்துள்ளது.
மிகவும் அவதானமாக முக்கிய சில விடயங்களைக் கருத்தில் எடுத்த பின்னரே இந்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்த முடிவெடுக்கப்பட்டது என்று சனல்4 தொலைக்காட்சியைச் சேர்ந்த டொரோத்தி பர்னே தெரிவித்தார்.
ஒளிப்படங்கள், இராணுவத்தின் உத்தியோகபூர்வமான வீடியோக் காட்சிகள், செய்மதி மூலம் பெறப்பட்ட படங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் கலும் மக்ரேயின் நெறிப்படுத்தலில் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்ஙகை அரசானது அதன் போர் வலயங்களுக்குச் சுயாதீன ஊடகவியலாளர்கள் செல்லத் தடைவிதித்திருந்தது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளையும் அங்கிருந்து வெளியேற்றி இருந்தது.
இவ்விரு தரப்பினர்களினதும் பிரசன்னம் யுத்த வலயங்களில் தடுக்கப்படும்போது, தனது சொந்த நாட்டு மக்கள் மீதுதான் மேற்கொள்ளும் தாக்குதல்களை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கமாட்டா என இலங்கை அரசு நினைத்திருந்தது.
ஆனால் மறுதலையாக, செல்பேசிகள் மற்றும் செய்மதி தொழிநுட்பம் போன்றவற்றிற்குள்ள சக்திகளை அரசு கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டது. பலவருட காலங்களாக யுத்தக் காட்சிகளை ஆவணப்படுத்தி வருபவன் என்ற வகையில் இலங்கையில் இடம்பெற்ற காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் கடினமானவையாக உள்ளன.
அந்தக் காட்சிகள் எமக்கு மிகுந்த வலிகளைக் கொடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாகச் சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறுமானால் சிறிலங்காவின் கொலைக்களம் என்ற இந்தப் படம் பல கேள்விகளைக் கேட்டு நிற்கும் என்று மக்ரே தெரிவித்தார்.

No comments:

Post a Comment