யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன் என முழங்கினார் வைகோ.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைகோ இவ்வாறு தெரிவித்தார். இக்கருத்தரங்கினை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இக்கருத்தரங்கில் மேலும், ஜேர்மனியின் டுவிஞ்சன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஜான் பீட்டர் நீல்சன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஹெய்டி ஹெளடாலா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
மேலும், இலங்கையிலிருந்து சிங்களத் தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீநாத் பெரேரா, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜா, இலங்கை வழக்கறிஞர் சங்கச் செயற்குழு உறுப்பினர் கனகசபை சண்முகரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ ரஞ்சன், போர் நடைபெற்றபோது ஈழத்தில் மருத்துவமனையில் செவிலியராக இருந்த தமிழ்வாணி ஞானக்குமார், லண்டனைச் சேர்ந்த இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் அம்மையார், பிரான்ஸ் தமிழ் ஈழ மக்கள் அவையின் உறுப்பினர் திருசோதி, பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக வாகீசன், தமிழர் ஒருங்கமைப்பு இயக்கத்தின் சார்பாக சாரா எல்ரிட்ஜ் அம்மையார் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றினர்.
தொடர்ந்து, அங்கு பேசிய வைகோ:
ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர்.
அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துக்கீசர் படை எடுத்தனர். 1619 ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638 ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், 1796 ல் பிரித்தானியர்கள் வந்தனர்.
நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பெப்ரவரி 4 ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர்.
போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக ஆனையிறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர். 2001 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர்.
சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005 ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு வல்லரசுகளின் இராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர்.
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95 ல் படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே! ஏன் ராஜபக்சேயைக் கூண்டில் எற்றக் கூடாது? அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?.
இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள இராணுவத்தினர் கொன்றார்களோ? அத் தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.
கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?. ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
சிங்களவர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
என் உரையை முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.
கல்லறைகள் திறந்து கொண்டன.
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும், உருவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்.
என தனது தமிழீழ உதயக் கவிதையை சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment