Sunday, October 09, 2011

சவேந்திர சில்வாவின் இராஜதந்திர விதிவிலக்கை ஏற்கும் அமெரிக்கா? - கொழும்பு ஊடகம்!

நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு நியுயோர்க் மாவட்ட மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை கடந்த செப்ரெம்பர் 23ம் நாள் கையளிக்கப்பட்டிருந்தது.

அவர் ஒக்ரோபர் 14ம் நாளுக்குள் தனது பதிலை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.

முன்னதாக இராஜதந்திர விதிவிலக்கை புறக்கணித்து தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் போவதாக சவீந்திர சில்வா கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அவரது சட்டவாளர்கள் இராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கும் என்று அறியப்படுவதாகவும் கொழும்பு வாரஇதழ் கூறியுள்ளது.

No comments:

Post a Comment