Sunday, October 23, 2011

நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பு புலிகளின் தடையை நீக்க உதவும்! - த வாசிங்டன் போஸ்ட்


தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை என நெதர்லாந்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவில் இருந்து வரும் த வாசிங்டன் போஸ்ட் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும் இவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதி குறைந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஐரோப்பிய கொள்கைகளின் அடிபடையில், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது எனவும்  விடுதலைப் புலிகள் கடந்த 27 வருடங்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தனர்.தவிர சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் அதில் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தலாமே தவிர, அவர்களை பயங்கரவாதிகள் என்று கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்தது.

இக் காரணங்கள் சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இப் பத்திரிகை எதிர்வுகூறியுள்ளது. விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தின் அறிவிப்பு அடிப்படையில், தம்மீதான தடைகளை நீக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம் எனவும் வோசிங்டன் போஸ்ட் தனது பதிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment