Wednesday, October 05, 2011

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை விஜயம்! தமிழ் மக்கள் தீர்வு குறித்து பேச்சு!!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்களில் ஈடுபடுவார்.

இதன் போது அவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாத்தாயின் பயணம் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது என்று புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மாத்தாய் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயளாலாளராக இருந்த நிருபமாராவ் பதவி விலகிச்சென்றதன் பின்னர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றவர் ரஞ்சன் மாத்தாய்.

கொழும்புக்கு அதிகம் பரிச்சயமற்றவர் இவர் என்று ராஜதந்திர வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தனது பயணத்தின்போது யாழ்ப்பாணம் வருவதற்கும் மாத்தாய் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்தியத் திட்டத்தின் பணிகளைப் பார்வையிடும் நோக்குடன் அவர் இங்கு வருகை தரவுள்ளார்.

அதேவேளை அவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வது இதுவே முதற்தடவை.

No comments:

Post a Comment