Friday, November 11, 2011

வன்னி மண்ணிலிருந்து அண்மையில் வந்த ஒரு பெண் போராளியின் கோரிக்கை



என் பாச உறவுகளே! உங்களுடன் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், கொஞ்சம் செவிகளைக் கொடுங்கள். நான் உங்களுடன் உரிமையாகப் பேசமுடியும். வன்னியின் மடியில் வாழ்ந்தவள். என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் என் மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக போராடியவள். என் குடும்ப உறவுகளை தொலைத்து ஏமாற்றப்பட்டவள்.



தமிழனின் போராட்டம் நேர்மையானது, உண்மைக்காக போராடுபவர்கள் என்று எம்மைத் திட்டித் தருவதாகக் கூறி தட்டி வீழ்த்திவிட்டது உலக வல்லரசுகள். நாம் 1ஆம் – 2ஆம் உலகப் போர்களை வரலாற்று ஏடுகளிலேயே படித்து வந்தோம். ஆனால் நாம் அதை விடக் கொடுமைகளை அனுபவித்து விட்டோம். வலி சுமந்தவர்களாக வாழ்கிறோம். எம் தலைவன் போராட்ட வடிவங்களாக அகிம்சைப் போராட்டத்தை தியாகி தீலிபன் அண்ணா மூலமாகவும், மக்கள் படையில் தியாகி அன்னை பூபதி மூலமாகவும், ஆயுதப் போராட்டத்தை வரிப்புலிப் போராளிகளாகவும், அதைத் தாங்கும் தூண்களாக மக்களையும் வைத்து போராடிக் காட்டியவர்.

உலகத்தின் எல்லாக் காதுகளுக்கும் தமிழன் என்று ஒரு இனம் தொன்று தொட்டு இறைமையுடன் வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று உரக்க கூறி விட்டார், ஆயுதம் அடங்கிவிட்டது.

உலகத்தின் எல்லா மூலைக்குள்ளும் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக உயிர் பயமற்று தமிழர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் போருக்குள் வாழ்ந்து மண்ணுக்காக தம் உறவுகளை விதைகுழிகளில் விதைத்து விட்டு, அந்த மான மறவர்களுக்கு முன்னால் நின்று போட்டு, விளக்கேற்றி ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த முடியாமல் அந்த மாவீரர் கோயில்கள் இருக்கும் திசை நோக்கி கை கூப்பி மௌனமாக அழ மட்டுமே அந்த உறவுகளால் முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் கைகளையோ, கண்களையோ நாம் வாழும் நாடுகள் கட்டிப்போடவில்லையே........எமக்காய் வாழ்ந்து எமக்காய் தங்கள் உயிர்களைத் தந்த அந்த உறவுகளை நினைவு கூரும் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், இப்போது நாம் போராடவில்லை,"செத்தவர்கள் போராடுகிறார்கள்".

இறுதிப்போரில் 30000 அல்ல அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் , இல்லை போராடினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒட்டு மொத்த மக்களும் தடைகளை உடைத்துக் கொண்டு ஒரே தடவையில் வெளியேறி இருக்க முடியும், இவ்வளவு மக்கள் அழிப்பு வந்திருக்காது. அவர்கள் வரிப்புலி தலைவனுடன் சேர்ந்து போராடினார்கள். தலைவனுக்கு கை கொடுத்து தலைவனுக்கு அருகிலேயே இருந்தார்கள்.

எதிரியால் தலைவனை நெருங்க முடியவில்லை, அதனாலேயே சிங்கள வெறியாட்சியாளனின் படைகள் தாயின் வயிற்றுக் குழந்தையுடன் சாப்பாட்டிற்காக வரிசையாக நின்ற குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என ஈவிரக்கமின்றி எப்படியெல்லாம் கொல்லமுடியுமோ, அப்படிக் கொலை செய்யப்பட்டார்கள்.

வரிப்புலிப் போராளிகள் சத்தியப் பிரமாணம் செய்தார்கள் "புலிகள் தாயகம் தமிழீழத் தாயகம்". மக்கள் படை சத்தியம் செய்தார்கள் "தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்", இவர்களும் போராளிகள். வரிப்புலிகள் போராளிகள் தமிழீழ விருட்சத்திற்கு இரத்த நீரூற்றினார்கள். இறுதிப்போரில் மக்களே தசைகளையும் எலும்புகளையும் உரமாக்கினார்கள். இவர்களும் மாவீரர்களே.

மான மறவர்களுக்கு நினைவுகள் வைத்து பூசிக்கும் போது ஒட்டு மொத்தமாக உரமான எம் மக்களுக்கு ஒரே ஒரு நினைவுக்கல் வையுங்கள். எம் தலைவன் எம் கண் முன் தோன்றும் போது நிச்சயம் உங்களை பாராட்டுவார். இந்த மாவீரர் நாளில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்வோம். நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன், " செத்தவர்கள் போராடுகிறார்கள்" என்று.

தமிழினப் படுகொலைகளிற்கு சாட்சியமாக புகைப்பட காணொளிகள் வாயிலாக அவர்கள் போராடுகிறார்கள். இவர்களுடைய சாவுகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான்- நீ என்று போட்டி போடுவதை விடுத்து எம் நாட்டின் விடிவுக்காக ஒற்றுமையாக நாம் வாழும் நாடுகளின் முன் நின்று ஐ.நாவின் காதுகளுக்கு கேட்கும் வரை உரத்துக் குரல் கொடுப்போம், எம் இனத்திற்கு விடிவு கிடைக்கும் வரை.

No comments:

Post a Comment