Sunday, November 13, 2011

புலிகளின் தலைவர்கள் சரணடைவது குறித்து பசிலுடன் பேசப்பட்டதை உறுதிசெய்கிறது நோர்வேயின் அறிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக அப்போது சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ச மூலம் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக நோர்வேயின் சமாதான முயற்சிகள் குறித்த மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைதிக்கான அடமானங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

“2009 மே 17ம் திகதிக்கும் 18ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில், புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசனும், சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவனும், நோர்வேஜியர்களுடனும், அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களுடனும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, தமிழ் அரசியல்வாதியான சந்திரநேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டு சரணடைய விருப்பம் வெளியிட்டனர்.

இதையடுத்து சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட அவசரமான பேச்சுக்களின் பின்னர், அவர்களை வெள்ளைக்கொடியுடன் முன்னே நடந்து செல்லும்படி கூறப்பட்டது.

சரணடையப் புறப்படுவதற்கு சற்றுநேரம் முன்னர் வரை அவர்களுடனான கலந்துரையாடல் இருந்தது. சில மணிநேரங்களின் பின்னர் அவர்கள் சுடப்பட்ட தகவல் வெளியானது.
விடுதலைப் புலிகளின் இறுதியான கோட்டைக்குள் நகர்ந்த அரசபடைகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் எஞ்சியிருந்த புலிகளின் தலைவர்களான கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோரைக் கொன்றனர்.

நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகியன போரின் இறுதிக்கட்டத்தில் இரத்தக்களரியைத் தவிர்க்க சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டன. அதேவேளை இணைத்தலைமையும் புலிகளின் சரணைடைவு தொடர்பாக பணியாற்றுவதற்கு இணங்கியது.

ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடவில்லை.

இந்தியா இந்த முயற்சியில் தொடர்புபடவில்லை. ஆனால் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துவதற்கு சில வேண்டுகோள்களை மட்டும் விடுத்தது.

தாக்குதலை தொடர்ந்து நடத்துவதற்கும், புலிகளை தோற்கடிப்பதற்கும் தெளிவான ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டில் இந்திய அரசு இருந்தது.

அமெரிக்காவும் நோர்வேயும் மனிதாபிமான நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக, புலிகளை சரணடைய வைப்பதற்கு நெருக்கமான பேச்சுக்களை நடத்தின.

இதற்காக சில ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. அவற்றில் முக்கியமானவை நான்கு.

1. புலிகளின் உயர்மட்டத் தலைமை தவிர்ந்த ஏனைய போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அரசாங்க உத்தரவாதம் வழங்குதல்.

2. புலிகள் தமது ஆயுதங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தல்.

3. புலிகளின் போராளிகள் ஐ.நாவிடம் அல்லது அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவிடம சரணடைவது.

4. பொதுமக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அரசியல் தீர்வுக்கு ஆதரவு வழங்கவும் இணைத்தலைமை நாடுகள் தலையிடுவதாக வாக்குறுதி கொடுத்தல். அமெரிக்கா திருகோணமலைக்கு பொதுமக்களை நகர்த்துவதற்காக கப்பல்களை தயார்படுத்தல்.

ஐ.நாவின் வதிவடப் பிரதிநிதி மூலம் அல்லது வேறு வழியின் மூலம் போர் வலயத்தில் ஒரு அனைத்துலக தலையீட்டை மேற்கொள்ள தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சாட்சியாக அமெரிக்காவும், இந்தியாவும் நிற்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கட்டத்தில் புலிகள் சரணடைந்தால் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா அரசிடம் இருந்து நோர்வே அரசுக்கு சமிக்ஞைகள் கிடைத்தன.

அதேவேளை 25 தொடக்கம் 50 வரையிலான புலிகளின் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் வெளிநாட்டு ஒன்றுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியம் குறித்து புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் கேபி கலந்துரையாடினார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்தத் திட்டத்தை ஏற்கமுடியாது என்று நிராகரித்து விட்டார்.

புலிகளின் தலைமை ஒரு கனவுலகத்தில் இருந்தது. அவர்கள் ஒரு அதிசயம் நிகழும் என்று நம்பினார்கள்.

முன்னைய சந்தர்ப்பங்களில் தப்பித்துக் கொண்டதைப் போன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் அதிசயத்தை நிகழ்த்துவார் என்று நம்பினர்.

அவர்கள் மிக நெருக்கமாக சுற்றிவளைக்கப்பட்டபோது புலிகளை சரணடையச் செய்யும் விருப்பம் கொழும்புக்கு மிகமிகக் குறைந்து போனது.
புலிகள் தப்பிக் கொள்வதை இந்தியா கூட விரும்பியிருக்குமா என்பது சந்தேகமே.

மேற்குலக அழுதங்களை புறக்கணிக்குமாறு மேற்கு அல்லாத நாடுகள் சிறிலங்கா அரசிடம் கூறியதாக சிறிலங்காவின் இராஜதந்திரி ஒருவர் கூறினார்.“ என்றும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment