Friday, December 30, 2011

கச்சதீவை இந்தியா உரிமைகோர முடியாது கையளித்த பேச்சுக்கே இடமில்லை பீரிஸ்

periesகச்சதீவை இலங்கைக்கு இந்தியா கையளித்தது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார்.
கச்சதீவு தொடர்பான இலங்கையின் இறைமையை உறுதிப்படுத்தும் 1974, 1976 இல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்த இரு உடன்படிக்கைகளையும் பேராசிரியர் பீரிஸ் சபையில் சமர்ப்பித்தார்.


கச்சதீவு தொடர்பாக இந்திய அரசியல்வாதிகளால் உரிமை கோரப்படுவது தொடர்பாக ஐ.தே.க. எம்.பி.ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலாகவே இந்த உடன்படிக்கைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
கச்சதீவானது இலங்கைக்கு வழங்கப்படவும் இல்லை. கையளிக்கப்படவும் இல்லை. ஆதலால் உத்தியோகபூர்வமாக இந்தியா கச்சதீவுக்கு உரிமை கோரும் விடயம் எழாது என்று பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.
கச்சதீவில் இலங்கைக்கு உள்ள இறைமை தொடர்பான வரலாற்று ரீதியான பதிவுகளின் அடிப்படையில் 1965 தொடக்கம் தனது உரிமையை நிலைநாட்டி வருகிறது. டச்சு கிழக்கிந்திய கம்பனி, பிரிட்டிஷ் காலனி அரசு ஆகியவற்றுக்கு சொந்தமாக இத் தீவு இருந்து வந்தது. பாக்கு குடா மற்றும் பாக்கு நீரிணை கடற்பரப்பு தொடர்பான கடல் எல்லை உடன்படிக்கை குறித்தபேச்சுவார்த்தைகள் 1974 இல் இடம்பெற்றபோது இலங்கை கச்சதீவு தொடர்பான தனது உரிமையை நிலைநாட்டியிருந்தது.
உத்தியோகபூர்வமான தொடர்பாடல்கள், வரைபடங்கள், தீவு தொடர்பான இலங்கையினால் தயாரிக்கப்பட்ட விசேட சட்டமூலம் என்பவற்றின் அடிப்படையில் ஆதாரங்கள், தீவின் மீதான நிர்வாகக் கட்டுப்பாடு என்பனவற்றின் ஊடாகவும் தனது உரிமையை இலங்கையில் நிலைநாட்டக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் கச்சதீவு தொடர்பில் இந்திய அரசு எதுவித அக்கறையும் காட்டவில்லை. அது எப்போதோ முடிந்துவிட்ட விடயம் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவுடனும் உறுதியுடனும் இருக்கின்றனர் எனவும் பீரிஸ் தெரிவித்தார். அதேநேரம் இந்திய அரசியல்வாதிகளின் நோக்கம் தொடர்பில் தமக்கு எதுவும் கூற முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
1974 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது. இது தொடர்பில் தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இந்தியப் பாராளுமன்றத்தில் கூட கச்சதீவு இலங்கைக்கே உரியது என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
கச்சதீவு உரிமை தொடர்பிலோ கச்சதீவை திரும்பப் பெற வேண்டுமென்பதிலோ இந்திய அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. இது எப்போதோ முடிந்து விட்ட விடயம் என்பதில் இந்திய அரசு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்றார்.
இதன்போது மேலதிக கேள்வி எழுப்பிய ரவி கருணாநாயக்க இந்திய அரசு அப்படிக் கூறினாலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கச்சதீவை திரும்பப் பெறுவேன் என்று கூறுகின்றாரே இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இந்திய அரசைப் பொறுத்த வரையில் கச்சதீவுப் பிரச்சினை தீர்க்கப்பட்ட விடயம் என்ற முடிவில் உள்ளது. எனவே இந்திய அரசின் நோக்கம் தொடர்பில் தான் நான் கூறமுடியும். இந்திய அரசியல்வாதிகளின் நோக்கம் தொடர்பில் எனக்கு எதுவும் கூற முடியாது.
இந்தியாஇலங்கையிடையே சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. எமக்கிடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அத்துடன் கச்சதீவு தொடர்பில் வேறு எந்தவொரு நாடும் பிரச்சினைகளை எழுப்பவில்லை. அதனால் இது ஒரு பிரச்சினையே அல்ல. பிரச்சினையில்லாத விடயத்துக்கு நாம் ஏன் தீர்வு காண முற்பட வேண்டும்? தற்போது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்குமிடையில் கப்பல் சேவையை நடத்தும் திட்டம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான புகையிரப்பாதை அமைப்பதில் இந்தியா எமக்கு பாரிய உதவிகளை வழங்குகின்றது.
இந்தியா சீனாவுடன் நாம் சமமான சிறந்த நட்புறவை பேணுகின்றோம். இந்த இரு நாடுகளும் நாம் பரீட்சித்துப் பார்த்து தேர்ந்தெடுத்த நண்பர்கள் என்றார்.
SOURCE:THENAKURAL

No comments:

Post a Comment