” ஜனவரி 29 முத்துக்குமார் தன்னைத்தானே தீயிட்டு உயிர்த் தியாகம் செய்யும்போது சென்னையில் இருக்கும் 120 கல்லூரிகளும் ஸ்தம்பித்துப் போய் நடுத்தெருவுக்கு வந்திருந்தால் ஈழப் போரை நிச்சயம் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். 31ம் தேதி முத்துக்குமார் உடலை எடுக்கும்போதும் ஈழத்தில் ஒரு லட்சம் பேர் செத்துக்கொண்டு இருக்கும்போதும் கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடத் தயங்கினார்கள். பீச், பார்க் என்று காதலை வளர்க்கும்போது மட்டும் பெற்றோரைக் கேட்காத
மாணவர்கள் போராடுவதற்கு மட்டும் அப்பா அம்மாவைக் கேட்கணும் என பெற்றோரைக் கேடயமாகப் பயன்படுத்தி கோழைகளாக இருந்தது என்னைப் பாதித்தது. அந்த பாதிப்புதான் உச்சிதனை முகர்ந்தால் படம்..” ஆதங்கத்தோடு பேசுகிறார் புகழேந்தி தங்கராஜ். ‘ மைந்தன் ‘, ‘ காற்றுக்கென்ன வேலி ‘, ‘ உள்ளக்கடத்தல் ‘, ‘ ரசிகர் மன்றம் ‘ ஆகிய படங்களை இயக்கியவர்.
‘ காற்றுக்கென்ன வேலி’க்குப் பிறகு ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்திலும் ஈழத்துப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்.
ஈழப் பிரச்னையில் யார் குற்றவாளின்னு நினைக்குறீங்க?
இயக்குனர் ராம் ” நாம் மாணவர்களை சந்திக்கத் தவறிட்டோம்”னு சொன்னாரு. முத்துக்குமார் இறக்கும்போது எழுதிய ஆவணத்தை, கடிதத்தை யாராலும் எழுத முடியாது. ‘என் உடலை வெச்சுப் போராடுங்க’ன்னு முத்துக்குமார் எழுதி இருந்தாரு. ஆனா முத்துக்குமார் உடலை வெச்சுப் போராடுறது நியாயமில்லை. மூணு நாள்லயே அந்த உடல் மோசமாயிடுச்சு. உடலைப் பார்த்த முத்துக்குமாரின் தங்கை கர்ப்பிணியான தமிழரசி மயங்கி விழுந்துட்டாங்க. இந்த அதிர்ச்சிக்குப் பிறகும் கொஞ்சமும் அலட்டிக்காம ஆட்சியில இருக்கறவங்க பதவி நாற்காலி நம்மை விட்டுப் போயிடக்கூடாதுன்னு ஃபெவிகால் போட்டு உக்காந்து இருக்காங்க.
இன்னொருபக்கம் தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலன்னு ரெண்டு காலேஜ் பசங்க அடிச்சுக்கிட்டு கலவரம் பண்றாங்க. நடிகர்களுக்கு கட் அவுட், பாலாபிஷேகம்னு கொண்டாடி, போராட வேண்டியதை விட்டுடறாங்க. டாஸ்மாக் போறது, பட்டாசு வெடிக்குறதுன்னு எந்த குற்ற உணர்வும் இல்லாம மொத்தத்துல நிம்மதியா இருக்குற நாமதான் குற்றவாளி.
ஈழம் எப்படி இருக்கு?
பாதுகாப்பான நகரத்துல, மாநிலத்துல எந்த ஆபத்தும் இல்லாம இருக்கோம். ஈழத்துல காட்டு வனாந்திரத்துல பெண்கள் போராளிகளா இருக்காங்க. முதல் முறையா யாழ்ப்பாணத்து பளை’ன்னு ஒரு இடத்துக்கு திருமாவளவனோடு போயிருந்தேன். ராணுவ முகாம் செக்போஸ்ட் சாயந்திரம் ஐந்தரை மணிக்கு அடைச்சிடுவாங்க. அப்புறம் போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி, எப்படியாவது போயிடலாம்னு ஆறு மணிக்கு டார்ச் அடிச்சுப் பார்த்தா ஆள் அரவம் இல்லாத இடத்துல “அண்ணே! நாங்க பாதுகாப்புக்கு இருக்கோம்”னு ஐந்து பெண்கள் காவல் காக்குறதைப் பார்த்து பிரமிச்சுப் போனேன். டிராக்டர் ஓட்டுற ஒரு பெண் கை அசைச்சு சந்தோஷமா ‘வாங்க’ன்னு சொல்றா.
வீட்டுக்கு பக்கத்துலயே ஸ்கூல் இருக்கணும். அதான் பாதுகாப்புன்னு நினைக்குற நாம இருக்குறது நாடில்லை.. காடு.
‘எதுன்னாலும் சொல்லுங்க நாங்க பாத்துக்குறோம்’னு தன்னம்பிக்கையை, தைரியத்தை ஊட்டுற அது காடில்லை – நாடு.
மக்களும் போராளிகளும் இரண்டறக் கலந்து சந்தோஷமா கிண்டல் அடிக்குறாங்க. அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரியா, அவர்களுக்குள்ள நண்பர்களா பழகுறாங்க. அந்த நெருப்பு அணையாது. குற்ற உணர்வோட சில லட்சம் மக்களைக் காப்பாத்துற பொறுப்பு நமக்கு இருக்கு. தொப்புள் கொடி உறவுன்னு வாய் வார்த்தைகள் சொல்லி நம்ம சொந்தக்காரங்களை அழிச்சிடக் கூடாது.
படம் மூலம் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும்?
புத்தனின் பெயரால் ஒரு இனம் செய்யும் தவறுகள் கொடூரத்தின் உச்சம். புத்தன் உருவச்சிலை இலங்கையில் இருக்க தகுதியே இல்லை. புனிதவதி. பதிமூணு வயசுப் பூவுக்கு என்ன நடந்துச்சு? உலகத்துல எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாதது நடந்திருக்கு. எங்க மகள் புனிதவதிக்கு படம் மூலம் கிடைக்கப்போகும் பதில்கள் பாதிக்கப்பட்ட, சீரழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, சிறுமிகளுக்கு கிடைக்கும் நியாயமா இருக்கும்.
புனிதவதி கேரக்டர்ல நடிக்க எப்படி தேர்வு செய்தீர்கள்?
ஓவியர் அரஸ் புனிதவதி சிரிச்சா, அழுதா, எப்படி இருக்கும்னு மூணு நாள்ல எட்டு ஸ்கெட்ச் போட்டுத் தந்தாரு. அதே மாதிரி தேடுன இருநூறு குழந்தைகள்ல புனிதவதி கிடைச்சிருக்கா. சிலர் இது ஒரிஜினல் புனிதவதியான்னு கேட்குறாங்க.
புனிதவதியோட சேர்ந்து மக்களும் அழுவாங்க, சிரிப்பாங்க. எங்க யூனிட் மாதிரியே மக்களும் புனிதவதியை தங்களோட மகளாப் பார்ப்பாங்க. அவளோட வாழுற ரெண்டரை மணிநேரம் வாழ்க்கை உலகம் முழுக்க அதிர்வலைகளை எழுப்பப் போகுது.
உங்க டீம் ஸ்பிரிட் எப்படி இருக்கு?
கேமராமேனா இருக்குற கண்ணன் ஆர்வத்துல வசனம் இப்படி இருக்கணும்னு சொல்றாரு. இசையமைப்பாளர் இமான் சம்பளமே இல்லைன்னாலும் நான் செய்யுறேன். இந்தப் பாட்டை நான் பாடலாமான்னு கேட்டாரு. சாதாரணமா உக்காந்தாலே எரிமலையா வார்த்தைகள் தரும் காசி ஆனந்தன் பாட்டு எழுதி இருக்காரு. எந்தப் படத்துக்கும் வசனம் எழுதாத தமிழருவி மணியன், கதை கேட்டதும் உருகிட்டாரு. கடுமையான் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அதற்கு இணையான அழகான தமிழ் வார்ததைகளைப் பயன்படுத்தி வசனம் எழுதி இருக்காரு. லண்டன்ல நடந்த நிகழ்ச்சியில படத்தோட பாடலை இமான் பாட ஒன்ஸ்மோர்னு அரங்கம் ஆரவாரம் செய்தது. யாரோ ஒருத்தர் எனக்கு மோதிரம் அணிவிச்சிட்டுப் போனார். முன் இருக்கையில இருக்கிற பெண்கள் பாட்டைக் கேட்டு உடைஞ்சு அழுதாங்க.
தெலுங்குதேச ஆப்ரேடிவ் கேமராமேன் ராஜூ என் அக்கா தோக்கு வெச்சிருப்பான்னு சொல்ற வசனத்தோட அர்த்தம் புரியாதபோதும் சார் ‘இது க்ளோஸ் அப் ஷாட் தானே’ன்னு கேட்டாரு. இதான் என் டீமோட பலம்.’’
சென்சார்க்கு போனது என்னாச்சு?
சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் தந்திருக்கு. கதைப்படி இப்படி தரவேண்டியதாயிடுச்சுன்னு சொன்னாங்க. பெற்றோரோடு சிறுவர்களும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கு. காசி ஆனந்தனோட ‘ஆயிரம் மலைகளைத் தோளாக்கு. அடிமைக்கு விடுதலை நாளாக்கு’னு வரும் பாட்டுல இரண்டாவது வரி சென்சார் கட். ஏன் அடிமைக்கு விடுதலை நாள் வரக் கூடாதா?கதிர்மொழி எழுதின பாடல் வரியில் ‘வரிப்புலி இனத்தை நரி நகம் கீறுமோ’ வரியை நீக்கிட்டாங்க. இன்னொரு வேடிக்கையும் நடந்திருக்கு. வெளிநாட்டுல படப்பிடிப்பு நடத்தி இருந்தா முறைப்படி தெரிவிச்சு இருக்கணும். நீங்க கடிதம் மூலமா வெளிநாட்டுல படப்பிடிப்பு நடத்தாததை தெரிவிங்கன்னு கேட்டு இருக்காங்க. படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்களைப் பார்த்து அப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கு. மரக்காணம், திருச்செந்தூர், கடப்பாக்கம், ஓதியூர், வெங்கனூர், முதலியார் குப்பம்னு தமிழகப் பகுதிகள்ல எடுத்ததுதான். ஒரே நிலப்பகுதி பிரிஞ்சு போனதுக்கான சாட்சியா என் பட லொக்கேஷன்கள் மட்டக் களப்புல எடுத்த உணர்வைத்தரும். திருச்செந்தூர்ல ஷூட்டிங் முடிச்சு புலிகள் உடையிலயே ஒரு காபி ஷாப்புக்குப் போகும்போது நிஜமான போராளிகள்னு நினைச்சு மெய்சிலிர்த்துப் போனாங்க. புலிகள் உடை சென்சார்ல கட் ஆகாம அப்படியே படத்துல வருது. சென்சார்ல படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கதாபாத்திரங்கள் எப்படி?
பேராசிரியர் நடேசனா சத்யராஜ் , அவர் மனைவியா சங்கீதா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆன்டனியா சீமான், மருத்துவர் சி.என்.தெய்வநாயகமா நாசர், அவர் மனைவியா லட்சுமி ராமகிருஷ்ணன்னு கேரக்டரா வாழ்ந்திருக்காங்க. சிறை, உதிரிப்பூக்கள், அவள் அப்படித்தான் மாதிரி சரியான தொனியில சொல்ல வேண்டியதை சொல்லி இருக்கோம். மக்கள் மொழியில மக்களுக்கான சினிமாவா சொல்லி இருக்கோம்.பார்க்குற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட முகம் தெரியும்.
அரசின் செயல்பாடு எப்படி இருக்கு?
இந்தியாவுக்கு இறையாண்மை இருக்குன்னு சொல்றாங்க. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்துல இலங்கை மீதான போர்க்குற்றம் சுமத்தப்பட்ட பிறகும் மத்திய அரசு மௌனம் காப்பதுதான் இறையாண்மையா? இதான் எனக்குப் புரியல.
இன்றைக்கு படம் ரிலீஸாகுது. மக்கள்கிட்ட என்ன சொல்லப் போறீங்க?
எனக்கு கட் அவுட், பேனர் வைக்கப் போறேன்னு பல மாவட்ட நண்பர்களும் சொன்னாங்க. நான் மறுத்துட்டேன். என் ஆசையெல்லாம் தமிழக மக்கள் குடும்பத்தோட படம் பார்க்கணும். படம் ஓடணும்னு நான் சொல்லல. இந்த படம் பார்த்து நாம் தெரிஞ்சோ, தெரியாமலோ தப்பு பண்ணிட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம்னு ஒவ்வொருத்தரும் அழணும். அந்த அழுகையில் நம்மோட ஒட்டுமொத்த அழுக்குகளும் கரைஞ்சு போய் உண்மையானவர்களா உருவாகணும். இனிவரும் காலங்களில் கைகட்டி வாய்மூடி மௌனியாக யாரும் இருக்கக்கூடாது. நான் சொல்ல விரும்புவது இதுமட்டும்தான்.
மாற்றங்களை உருவாக்குவோம் வா தோழா!
- க.நாகப்பன்.
படம்.பா.காயத்ரி அகல்யா.
நன்றி ஆனந்தவிகடன்
No comments:
Post a Comment