அத்துடன் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி கொண்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சிறிலங்காவுடன் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமையவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.
கடந்தவாரம் நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் இதனை உறுதி செய்திருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த அறிக்கையின் குறைபாடுகள் பற்றி சிறிலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுகான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அத்துடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் பல்வேறு மட்டங்களிலும் சிறிலங்கா அரசுடன் இதுதொடர்பாக பேச்சு நடத்தியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபாடுகளை கொண்டது- போதுமானதாக இல்லை என்ற தகவல், சிறிலங்கா அரசுக்கு அமெரிக்காவினால் இதன் மூலம் பரிமாறப்பட்டுள்ளது.
அத்துடன் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையிலான புதிய அறிக்கை ஒன்றை சிறிலங்காவிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதான தகவலும் பரிமாறப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த அழைப்பு சிறிலங்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள போதும், இன்னமும் உரிய பதில் கொடுக்கப்படவில்லை.
சிறிலங்காவின் முறைப்படியான பதிலை இராஜத்தந்திர வழிமுறையில் அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னரே, ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய அமெரிக்கா வெளிப்படையான கருத்தை முன்வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா கோரியுள்ளது போன்று மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான முழுமையான அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்க இணங்கினால், அமெரிக்கா மென் போக்கில் அணுகும் என்றும், இல்லையேல் கடும் போக்கை வெளிப்படுத்தும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு சிறிலங்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், புதிய அறிக்கை ஒன்றை தயாரிக்க அது இணங்காது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன
No comments:
Post a Comment