Tuesday, December 13, 2011

ஈழத் தமிழர்களுக்கு உலகம் எந்த வாழ்வைத் தீர்மானிக்கப் போகின்றது?

ஈழத் தமிழர்கள் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டார்கள். இரத்தம் சிந்தி, உயிர்களையும் பலி கொடுத்தும் விட்டார்கள்.

ஒன்றல்ல... இரண்டல்ல... பலி கொள்ளப்பட்ட தமிழர்களது தொகை இரண்டு இலட்சத்துக்கும் மேல் என்கிறது கணக்கெடுப்பு. ஆனாலும், அவர்களது துயரம் இன்னமும் தீரவில்லை. மீண்டும் மீண்டும் அவல வாழ்வுக்குள் புதைந்து நின்று அழுகின்றாhகள். அவர்களது அந்த அழு குரல்களும் வெளியே கேட்கப்படாது என்பதற்காக அவர்களைச் சுற்றி இலட்சத்திற்கும் அதிகமான சிங்களப் படைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லை மீறும் சிங்களப் படைகளால், தமிழர்களது உயிர்கள் மட்டுமல்ல... தமிழ்ப் பெண்களது மானமும் பலி கொள்ளப்படுகின்றது.
இத்தனை அவலங்களுக்குப் பின்னரும், உலகம் இன்னமும் மௌனத்திலேயே ஆழ்ந்திருக்கின்றது. ஈழத் தமிழர்களது இன்னல்களும், துயரங்களும் அவர்களுக்குப் தெரியவில்லையா...? மனதின் வலிகள் அவர்களுக்குத் புரியவில்லையா...? மானுக்கும், மயிலுக்கும், யானைக்கும் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இயற்றும் மனிதாபிமான சிந்தனையாளர்களுக்கு ஈழத் தமிழினம் அறவே இல்லாதொழிக்கப்படுவதை மட்டும் எப்படி வேடிக்கை பார்க்க முடிகின்றது?

மனித உரிமைப் பிரகடனம் செய்து 63 வருடங்கள் என்கிறார்கள்...? அது என்ன என்பது ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை புரியவே இல்லை. அந்த அறுபத்து மூன்று வருடங்களும் அவர்கள் அவலங்களை மட்டும்தானே வாழ்க்கையாகப் புரிந்து கொண்டுள்ளாhகள்? நீதி கிடைக்காத இந்த உலகத்தில் இருந்தென்ன... இறந்தென்ன என்றுதானே, ஈழத்து இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் புலியாக மாறினார்கள். ஆனாலும், நீதி ஈழத் தமிழர்களுக்கு எட்டாத உயரத்திலே, கிட்டாத பொருளாகவே இப்போதும் இருக்கின்றது.

உலகெங்கும் சிதறித் தப்பிக் கரையொதுங்கிய ஈழத் தமிழர்களும் தங்களது தாயகத்தின் துயர் தீர்க்கப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அமைதியாக வாழ்வதற்காக, தாங்கள் பிறந்த மண்ணையும், தங்கள் உறவுகளையும் பிரிந்து, நினைவுகளையும், கனவுகளையும் சுமந்த மனங்களுடன் கரை ஒதுங்கியவர்கள், இன்று அமைதி இழந்து நிற்கின்றார்கள். ஈழத்தின் அழுகுரல்கள் அவர்களது தூக்கத்தைக் கெடுக்கின்றது. ஈழத் தமிழினம் சிந்தம் இரத்தம் அவர்களது புலம்பெயர் வாழ்வின் அமைதியையும் கெடுக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்களது கொடூரங்கள் அவர்களைக் கோபம் கொள்ளச் செய்கின்றது.

அவர்கள் தாம் வாழும் தேசங்களிடம் தங்களுக்கான நீதியை மட்டுமே கோருகின்றார்கள். தங்கள் உறவுகளுக்கான வாழ்வுரிமையை மட்டுமே கேட்கின்றாhகள். ஆயுதம் ஏந்தி உரிமைக்காகப் போராடுவதும் பயங்கரவாதம் என்று வரைமுறை செய்த உலகின் முன்னால், அவர்கள் நிராயுதபாணிகளாக நீதி கோருகின்றாhகள்.

மனித உரிமைகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டிசம்பர் 10 தமிழர்களுக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்படட்ட கறுப்பு நாட்களாகத் தொடர்வதன் காரணம் என்ன? 63 வருடங்களைக் கடந்து செல்லும் இந்த மனித உரிமை நாள், ஈழத் தமிழ் மக்களுக்கு எதை உணர்த்தப்போகின்றது? எதைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றது?

உலகம் இனியாவது தீர்மானிக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதை.

சிவகுரு பாலச்சந்திரன்
மக்கள் பிரதிநிதி
பிரான்ஸ்

No comments:

Post a Comment