Monday, December 05, 2011

உறவுகளைத்தேடி அலையும் உறவுகள்.!



இறுதி போர் முடிவுக்கு வந்து இதுவரையில் 2000 சிறார்கள் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பெற்றோர்கள் தமது காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலைகின்றனர்.
இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
இலங்கையின் வடபகுதியில் யுத்தம் இடம்பெற்ற 2009 காலப்பகுதியில் சாந்தகுமார் கமலா அங்கிருந்து தப்பியோடிய வேளையில் தனது மார்புப் பகுதிக்குள் சில நிழல்படங்களை ஒளித்து வைத்திருந்தார்.
பாடசாலைச் சீருடையில் நேர்த்தியாகக் காணப்படும் சிறுவன் ஒருவனின் படத்தை கமலா தற்போது காண்பித்தார். அது அவருடைய மகனான தனுராச்சின் நிழல்படம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் இச்சிறுவன் காணாமற் போயுள்ளான். கமலாவிற்கு தனது மகன் திரும்பவும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறார்.
காணாமற் போன பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளைப் போல தனுராச் இறிதி பேரில் இடம்பெற்ற இறுதிப்பகுதியில் காணாமற் போயிருந்தார்.
அதாவது 2009ல் தமிழ்ப் புலிகளிற்கும் இராணுவப் படைகளுக்கும் இடையில் தீவிரயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கமலாவின் மகன் காணாமற் போயுள்ளார்.
காணாமற் போன சில பிள்ளைகளை அவர்களது குடும்பத்தினர் தேடிக் கண்டுபிடித்ததை அடுத்து, தனுராச்சின் அம்மா தொடர்ச்சியாக தனது மகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
மாசி மாதம் 2009ல், 16 வயதே நிரம்பியிருந்த தனுராச் வீதியின் அருகிலிருந்த பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த வேளையில் விடுதலைப் புலிகள் அவனை தமது படையில் இணைத்துக் கொண்டனர்.
இதன் பின்னர் தனுராஜின் குடும்பம் பிறிதொரு பிள்ளையை போராட்டத்திற்கு அனுப்பத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் அட்டை ஒன்றை கமலாவிடம் புலிகள் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் புலிகளின் இறுதிக் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த குறுகிய கரையோரப் பகுதியில் தனது மகன் மீண்டும் தன் முன் வருவான் என்ற நம்பிக்கையில் கமலா காத்திருந்தார்.
ஆனால் வைகாசி 17,2009ல் அதாவது படையினர் தமது இறுதி யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த வேளையில், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்ற மக்களுடன் கமலாவும் இணைந்து கொண்டார். இரு நாட்களின் பின்னர் மகிந்தா, புலிகளுடனான போரில் வெற்றி கொண்டதாக அறிவித்தார்.
இந்நிலையில் பல மாதங்கள் கடந்தும் தமது உறவுகளைப் பிரிந்து வாழும் குடும்பங்களை ஒன்றிணைப்பதில் இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது மிகப் பெரிய வேலைத்திட்டமாகும். மருத்துவமனைகள் யுத்தத்தில் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிந்தன. அத்துடன் முகாங்கள் இடம்பெயர்ந்த மக்களால் நிறைந்திருந்தன. சண்டைக்களங்கள் இறந்த உடலங்களால் சூழப்பட்டுக் காணப்பட்டன.
இவ்வாறான நிலையில் காணாமற் போன பிள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்கான வேலைத்திட்டமும் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
ஏழு வயது நிரம்பியிருந்த ராயேஸ்வரன் விதுசன் போன்ற சில சிறுவர்கள் காயமடைந்திருந்ததால் ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரிக்கும் சிறுவர் விடுதிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு இடம் நகர்த்தப்பட்டனர்.
விதுசனின் சகோதரி மற்றும் பாட்டன், பாட்டி ஆகியோர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். இதிலேயே விதுசனும் காலில் காயமடைந்தார்.
16 வயது நிரம்பியிருந்த சுப்பிரமணியம் லில்லிமலர் போன்ற சில சிறார்களின் பெற்றோர்கள் மருத்துவத்திற்காக வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் தமது பெற்றோர் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பாக அறியாதவர்களாக உள்ளனர்.
லில்லிமலரின் காயமடைந்த தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஒரே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவரது இரண்டாவது சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் வேறிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
லில்லிமலர் காலில் காயமடைந்ததால், சிறுவர் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் மூன்றாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கப்பால், யுத்தத்திலிருந்து தப்பித்து குறுகிய பாலங்கள், மற்றும் நீர்நிலைகள், நெரிசல் மிக்க வீதிகளால் விரைந்து சென்றபோது தமது பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும் உண்டு. சிலர் புலிகளால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர்.
வேறும் சிலர் வெவ்வேறு பேரூந்துகளில் ஏற்றப்பட்டு பல்வேறு முகாங்களிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை விட்டுப் பிரிந்தனர். அல்லது அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாலும் சிலர் தமது பாதுகாவலர்களை விட்டுப் பிரிந்தனர்.
யுத்தம் முடிந்த கையுடன் 2000 வரையிலான சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டனர். ஆனால் தற்போதும் பெற்றோர்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து காணாமற் போன பிள்ளைகளைத் தேடி பெற்றோரிடம் இணைப்பதற்கான பிரிவு ஒன்றை மார்கழி 2009ல் உருவாக்கியுள்ளனர்.
புரட்டாசி 2011ல் இப்பிரிவானது காணாமற் பிள்ளைகள் தொடர்பான 690 விண்ணப்பங்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் 490 விண்ணப்பங்கள் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்ட சிறார்கள் தொடர்பானது. 29 சிறார்கள் மட்டும் தற்போது அவர்களது குடும்பங்களுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரிவில் பணியாற்றுபவர்கள், காவற்துறை, மருத்துவமனை மற்றும் சிறுவர் விடுதி, இடம்பெயர்ந்தோர் முகாங்களில் பராமரிக்கப்படும் பதிவுப் புத்தகங்கள் போன்றவை முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
உதாரணமாக, சிறுவன் ஒருவர் தொடர்பான தேடுதல்களை மேற்கொள்வதற்கு பல மாதங்கள் கூட தேவைப்படலாம். அதாவது குறித்த சிறுவனின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல், பிறப்புச் சான்றிதழைக் கண்டுபிடித்தல், மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும் பினனர் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த சிறுவனை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரையான அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு பல மாதங்கள் எடுக்கின்றன.
இப்பிரிவானது மிகக் குறைந்த சிறார்களை அவர்களது குடும்பத்துடன் இணைத்திருந்தாலும் கூட, தமது பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோருக்கு நம்பிக்கை தரும் இடமாக இது உள்ளது.
திருமதி கமலாவும் தனுராயின் விபரத்தை இப்பிரிவின் தரவுத் தளத்திற்கு வழங்கியுள்ளார். விதுசனின் அம்மா இப்பிரிவின் ஊடாகவே தனது மகனைக் கண்டுபிடித்தார். அதேபோன்றே லில்லிமலரும் தனது குடும்பத்தவர்களுடன் மீள இணைந்து கொண்டார்.
பல குடும்பங்கள் நாள்தோறும் தமது முயற்சியைத் தொடர்கின்றார்கள். சிலவேளைகளில் இவர்கள் அழுகிறார்கள். சிலவேளைகளில் இவர்கள் ஊகித்துக் கொள்கிறார்கள். இவர்கள் தமது தேடுதல் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.
நாடு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கு வாழும் பல குடும்பங்கள் இன்னமும் ஒன்று சேர்க்கப்படவில்லை.

No comments:

Post a Comment