Sunday, October 13, 2013

சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கக்கோரி தியாகு அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்


தமிழ் மக்களைக் கொடூரமாக கொன்று குவித்த சிறிலங்கா அரசை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் திரு தியாகு அவர்கள் நேற்று மாலை முதல் சாகும் வரையிலான  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தியாகு அவர்களுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் 15 பேரும்உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

*தமிழ் மக்களை கொடூரமாக கொன்று குவித்த சிறிலங்கா அரசை, கொமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.

*சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், இந்திய அரசு கைவிட வேண்டும். என்கிற கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தியாகு அவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், நேற்று இரவு தியாகு அவர்கள் நேரில் சேந்து சந்தித்து உரையாடியதுடன், வியாழக்கிழமை தானும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை நீக்கக் கோரி, சென்னை கடற்கரைச் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தியாகு அவர்கள் முயற்சிகளை முன்னெடுத்த போது தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க மறுத்திருந்தது.

இதையடுத்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தெளிவுபடுத்தி, தமது போராட்டத்திற்கான அனுமதியை வழங்குமாறு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கையளித்திருந்தார்.

அவரது மனுவை நேற்றுப் பிற்பகல் விசாரித்த உயர்நீதிமன்றம், கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கமுடியாது என்ற அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதேவேளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அத்தோடு உண்ணாவிரதம் இருக்கும் நாள், எத்தனை மணி நேரம் மற்றும் எவ்வளவு பிரமுகர்கள் வருவார்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை தியாகு அவர்களால்  நீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்தே, தியாகு அவர்கள் நேற்றுமாலை சாகும் வரையிலான உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment