Wednesday, April 02, 2014

ராஜீவ் கொலை கைதிகள் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
ஆயுள் தண்டனையாக குறைப்பு
இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுக்க மத்திய அரசு நீண்ட காலஅவகாசத்தை எடுத்துக்கொண்டது. இந்த தாமதத்தை காரணம்காட்டி, இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது.விசாரணை முடிந்து கடந்த பிப்ரவரி 18–ந் தேதி இந்த வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.

சீராய்வு மனு தள்ளுபடி
இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு பிப்ரவரி 20–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.மத்திய அரசின் சீராய்வு மனு மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களை கவனத்துடன் மறுஆய்வு செய்ததாகவும், அந்த மனுவில் பரிசீலனைக்கான முகாந்திரம் ஏதும் இல்லை எனவும் கூறி மத்திய அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோட்டின் இந்த தீர்ப்பினால் இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை கிடையாது என்பது உறுதியாகி இருக்கிறது.
மற்றொரு மனு
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவின் மீதான விசாரணையும் கடந்த மாதம் 27–ந் தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மனுவின் மீது எழுத்துப்பூர்வமான வாதங்களை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
source : thanthi

No comments:

Post a Comment