Saturday, April 19, 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பு அடுத்தவாரம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள, ஏழு குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படும் என்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று நடைபெற்ற மேற்குப் பிராந்திய நீதிபதிகள் மாநாட்டில் உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் இருக்கும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி ப.சதாசிவம், தான் அடுத்தவாரம் ஓய்வுபெறுவதற்கு முன்பாக இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ப.சதாசிவத்தின் பதவிக்காலம் வரும் 26ம் நாளுடன் முடிவடைகிறது.

வரும் 27ம் நாள் நீதிபதி ஆர்.எம்.லோதா, இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.

இந்தநிலையிலேயே, அடுத்தவாரம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி ப.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மீதான விசாரணைகள் ஏற்கனவே முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதால், வரும் 24ம் நாள் அங்கு தேர்தல் முடிந்த பின்னர், 25ம் நாள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிய வருகிறது.sorce:PP

No comments:

Post a Comment