ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில், சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவினால், பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 70 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவையே சென்றடைகின்றன.
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் தன்னிச்சையாக பொருளாதாரத் தடையை விதித்தால், அதைச் சமாளிக்க மாற்றுவழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “எமது உற்பத்தியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 30 சத வீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் சிறிலங்காவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிர்காலத்தில் சவால்கள் எதிர்நோக்கப்படுமாயின், அதற்கு மாற்றீடாக வேறு சில நாடுகளுக்கு எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..
தென்னாபிரிக்கா, ஜப்பான், ரஸ்யா போன்ற நாடுகளுக்கு எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான செயற்றிட்டம் வர்த்தக அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment