Friday, April 11, 2014

அவுஸ்ரேலியாவில் தீக்குளித்த தமிழ் இளைஞர் உயிருக்குப் போராட்டம்

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பும், அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் முடிவினால், விரக்தியடைந்து, தீக்குளித்த இலங்கைத் தமிழ் இளைஞன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

ஜனார்த்தனன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த இளைஞர், சிட்னியின், மேற்குப் புறத்தில் உள்ள பல்மெய்ன் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு, பெற்றோலை ஊற்றி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டார்.

இணைப்பு நுழைவிசைவு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இவரது புகலிடக் கோரிக்கையை, அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் நிராகரித்திருந்ததுடன், அவரைத் திருப்பி அனுப்பவுள்ளதாகவும், கடிதம் அனுப்பியிருந்தது.

தீக்குளித்ததால், உடலில் 70 சதவீதம் எரிந்த நிலையில், இந்த இளைஞர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

கொன்கோர்ட் மருத்துவமனையில் இவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவுஸ்ரேலிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பி அங்கு சாவதை விட தாம் அவுஸ்ரேலியாவில் சாக விரும்புவதாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

இது மிகவும் ஆழமான துயரம் மிக்க நிகழ்வு என்று அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞனின் முறையான கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து கவனம் செலுத்தி வருவதாகவும், அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.[ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014, 00:21 GMT ] [ தா.அருணாசலம் ]source:p.p

No comments:

Post a Comment