பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும், அவர்களின் மனைவியரும்
இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில்
ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பை அடுத்தே
இந்த பயணம் ரத்துச்செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை,
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்து இரண்டு
வாரங்களுக்குள் இந்த பயணம் மேற்கொள்ளப்படவிருந்தமையால் இது சர்ச்சைக்குரிய
பயணமாக கருதப்பட்டது. அதுவும் ஐ.நா சர்வதேச விசாரணைகளுக்கு தாம்
ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை அறிவித்திருந்தது.
குறித்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்துக்குமான முழுச்செலவையும்
தமிழரும், இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளருமாக செயற்படும் முன்னாள்
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் தொண்டு நிறுவனம்
பொறுப்பேற்றிருந்தது என்று சனல் 4 தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில்
பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே
பங்கேற்கவிருந்தனர்.அவர்கள் இலங்கையில் அரச தரப்பினரையும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவையும் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
எனினும் இந்த பயணம் அரசியல் அடிப்படையில் ஏற்பாடாகவில்லை என்று முத்தையா
முரளிதரனின் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயணம் இலங்கையின்
அனைத்து நாடாளுமன்றக் குழுவுக்கு அறிவிக்கப்படாமலேயே ஏற்பாடாகியிருந்தது.
இந்த நாடாளுமன்ற குழுவினர், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிற்பகல்
2.25க்கு இலங்கைக்கு புறப்படவிருந்தனர்.
தொழில்கட்சியின் சார்பில் எவரும் இந்த குழுவில் இடம்பெறவில்லை என்று
தொழில்கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் சனல் 4வுக்கு கிடைத்த
விமான டிக்கட்டுக்களின் பிரதிகளின்படி இந்த பயணத்தில் இரண்டு தொழில்கட்சி
உறுப்பினர்களும் உள்ளடங்கவிருந்தனர். 2012 ம் ஆண்டு முதல் கொன்சவேட்டிவ்
கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் செலவில்
இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிலங்கா அரசு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவான
அமைப்புக்களையும், ஆதரவாளர்களையும் தடைசெய்து விட்டு சர்வதேசத்தின்
கவனத்தினை திருப்ப எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் தகவல்கள்
தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவித மனித உரிமை
மீறல்களும் இடம்பெறவில்லை, தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பிவிட்டனர் என்பதை கட்டுவதற்கு சிறிலங்கா அரசு எடுத்த முயற்சி
பிரித்தானிய தமிழர் பேரவையால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்
உள்ள மூன்று அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு
ஒன்று சிறிலங்கா செல்ல இருந்தது. இக்கட்சிகளின் தலைமைகளுடன் தொடர்ச்சியான
அழுத்தத்தின் மூலம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment