Thursday, April 17, 2014

கர்நாடகத் தமிழர்களின் வாóக்கு யாருக்கு?

மக்களவைத் தேர்தலில் கர்நாடக தமிழர்களின் நிலைப்பாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு 1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் பேசும் மக்கள் வாழும் பல பகுதிகள் கர்நாடகத்தில் சேர்க்கப்பட்டன. சென்னை மாகாணமாக இருந்த போது ஏராளமான தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, அந்த தமிழ் மக்கள் கர்நாடகத்தில் நிலை கொண்டுவிட்டனர்.
கர்நாடகத்தில் கலை, கலாசாரம், தொழில் மேம்பாட்டுக்கு தமிழர்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். மைசூர் உடையார்கள் ஆட்சிக் காலத்திலும் அதிகாரத்தில் தமிழர்கள் பங்கு வகித்தனர்.
தமிழர்களின் பலம்: பெங்களூருவில் மட்டும் 40 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெங்களூரு தெற்கு, வடக்கு, மத்திய மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிவாஜிநகர், சாந்திநகர், புலிகேசிநகர், சர்வக்ஞநகர், காந்திநகர், விஜயநகர், கோவிந்த்ராஜ்நகர், மகாலட்சுமி லேஅவுட், பேட்ராயன்புரா, பிடிஎம் லேஅவுட், ராஜாஜி நகர், சர்.சி.வி. ராமன் நகர், சிக்பேட்டை, ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர், சாமராஜ்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை தமிழர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.

அதேபோல, கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயல், ஹனூர், கொள்ளேகால், குண்டல்பேட்டை, கிருஷ்ணராஜா, நரசிம்மராஜா, மைசூர், சாமுண்டீஸ்வரி, வருணா, சாமராஜ்நகர், ஹாசன், ஷிமோகா, தாவணகெரே, பங்கார்பேட்டை, மண்டியா, தும்கூர், பத்ராவதி, சாகர், ஆனேக்கல் போன்ற 100-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடக்கிய சாமராஜ்நகர், மைசூர், ஷிமோகா, கோலார், தும்கூர், மண்டியா, பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை முடிவுசெய்யும் அளவுக்கு தமிழர்கள் பலம் பெற்று விளங்குகிறார்கள்.
கர்நாடகத்தில் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், கர்நாடகத்தில் வாழும் மொழி சிறுபான்மையினர்களான தெலுங்கர்கள், மராத்தியர்கள், மலையாளிகள், குஜராத்திகள், ராஜஸ்தானிகள் பெற்றுள்ள அரசியல் அங்கீகாரம் தமிழர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக வாய்க்கவே இல்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடையே பரவலாக உள்ளது.
அரசியல் அதிகாரம் இல்லை: கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய தலித்துகள் கூட்டமைப்பு, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் சி.எம்.ஆறுமுகம், எம்.சி.நரசிம்மன், கிரேஸ் டக்கர், எஸ்.ராஜகோபால், எம்.ஏ.அமலோற்பவம், டி.பூசலிங்கம், பி.கே.ரங்கநாதன், மு.பக்தவச்சலம், டி.எஸ்.மணி, சி.கண்ணன், எம்.முனுசாமி, எஸ்.ராஜேந்திரன், பி.முனியப்பா, டி.ஜி.ஹேமாவதி, ஜே.அலெக்சாண்டர் ஆகிய 15 பேர் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கோலார் தங்கவயல், காந்திநகர், சாந்திநகர், பாரதிநகர் தொகுதிகளில் மட்டுமே இவர்களும் வென்றுள்ளனர். மலையாளிகள், தெலுங்கர்கள், மராத்தியர்கள் பல பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் எம்.சுந்தர், ஆறுமுகம், இந்திய குடியரசு கட்சியின் சி.எம்.ஆறுமுகம், சுயேச்சைகளாக எம்.தர்மலிங்கம், கிளெமென்ட் ஜோசப், ஆர்.ஏ.தாஸ் ஆகியோர் போட்டியிட்டு, ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
மூன்று கூறுகளாகும் தமிழர்கள்: தமிழர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காக கர்நாடக தமிழர் முன்னேற்றக் கழகம், கர்நாடக தமிழர் கட்சி போன்ற பல அரசியல் கட்சிகள் உருவாகின.
கர்நாடக தமிழர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாகவே இருந்து பழகிவிட்டனர். பாஜக, மஜத போன்ற கட்சிகள் தமிழர்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டன.
திராவிடக் கட்சிகளும் கர்நாடகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், 18 ஆண்டுகளாக பெங்களூருவில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை 2009-இல் திறந்துவைத்து அந்த பெருமையை அன்றைய பாஜக அரசின் முதல்வர் எடியூரப்பா தட்டிச் சென்றார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் ரூத்மனோரமா என்ற தமிழரை களமிறக்கியுள்ளதால் மஜத மீது தமிழர்களுக்கு ஈர்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், உள்ளூர் பிரச்னைகளின் அடிப்படையில் கர்நாடக தமிழர்களின் வாக்கு மஜத, காங்கிரஸ், பாஜக கூறுகளாக பிரியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
First Published : 17 April 2014 05:17 AM IST 
source:dinamani

No comments:

Post a Comment