Wednesday, April 16, 2014

சிங்கள அரசின் தடைப்பட்டியலுக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்புக்கள் ! [Tuesday, 2014-04-15 19:48:13]

News Service'தடை'' என்பதனை நியாயத்துக்குப் புறம்பானதென நிறுவவும் சனநாயக இராசதந்திர வழிகளில், எம்மினத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதென, அமைச்சரவை தீர்மானித்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையிலும் பின்னர் அதன் அமைச்சரவையிலும் முறையே சிங்கள அரசின் தடைப்பட்டியல் தொடர்பில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
   இந்நிலையில் எடுக்கப்பட்டு செயல்முனைப்புக்கள் குறித்து நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா அரசின் தடையினைச் செல்லுபடியற்றதாக்கும் முயற்சியில் நாங்கள் ஒன்றிணைந்த முறையில் இவ்விடயத்தை ஐ நா மனித உரிமைக் குழுவுக்கும், பேச்சு சுதந்திரத்திற்குப் பொறுப்பான ஐ நா சிறப்புத் தூதுவரிடமும், மனித உரிமைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிரான ஐ நா சிறப்புத் தூதுவரிடமும் ,ஐ நா பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவிடமும் எடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட ஒரு மக்களாக பரிகாரம் தேடும்வகையில் எமக்கென இறைமையுடைய தமிழீழ சுதந்திர அரசை உருவாக்குவதற்கான தன்னாட்சி உரிமையை அமைதி வழியில் கோருவது ஒருபோதும் பயங்கரவாதமாகாது என்ற எமது தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்துவதோடு அந்த உரிமையை இத் தடைமூலம் மறுப்பது எமது பேச்சுச் சுதந்திரத்தை மீறுவதாகும் என்பதையும் வலியுறுத்தி வாதிடுவோம்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நாம் பின்வரும் மூன்று செயற்குழுக்களையும் நியமித்துள்ளோம்.
- தடைப் பட்டியலிலுள்ள ஏனைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல்.
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
- இவ் விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைக்கான குழுவின் முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.
எமது இந்தச் செயற் திட்டத்தினைத் தீவிரப் படுத்தும் நோக்குடன், மே18 தமிழீழத் தேசிய நாளையொட்டி நினைவேந்தல் வாரத்தின் போது, தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கும் வேலைத் திட்டத்தையும் துரித முறையில் செயற்படுத்துதல் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவாறு 'சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ' என்ற செயற் திட்டத்தையும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கபவுடள்ளது. இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும் மே18ம் தமிழீழத் தேசிய துக்க நாளிளை அண்டிய வாரத்தில் மாநாடொன்றினை பிரித்தானியாவில் நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த முன்னெடுப்புகளுக்குத் தாங்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவையும் வழங்குமாறு வேண்டுவதோடு எமது உறவுகளையும், எமது இனம் சாராத பிறரையும் இதில் பெருமளவில் கலந்து கொள்ள வைப்பது எங்கள் அனைவரதும் பெரும் பணி என்பதை இன்றயை இந்த முக்கிய கால கட்டத்தில் நான் வலியுறுத்த விரும்புகின்றேன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
இச் செயற்திட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கி வெற்றி பெறச் செய்வது முள்ளிவாய்க்காலில் மடிந்துபோன எமது உறவுகளுக்கு நாம் வழங்கும் புனிதமானதும் பொருத்தமானதுமான அஞ்சலியாகக் கருதி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அன்புடன் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment