சென்ற கட்டுரையின் தொடர்ச்சி ....
ரேரும் நொவரும் என்று திருச்சவை , ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய மடல் ஒன்றினை தயாரித்து வெளியிட்டது. ( அறிக்கைகளை மட்டும் வைத்து திருச்சவையை எடை போட்டால் போராளி இயக்கங்களை விட புரட்சிகரமானது இத்திருச்சவை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுவோம் கவனம் !) கூட்டுடமைக் (கம்யுனிசம்) கொள்கை உலகின் பல நாடுகளில் வேரூன்ற ஆரம்பித்துவிடும் .அதை கருத்தளவில் எதிர்கொள்ளவே ரேரும் நொவரும் எழுதப்பட்டது . அதன்பின்பு திருச்சவை அதுபோன்ற பல அறிக்கைகளை வெளியிட்டது . தொழிலாளர் நலன் பற்றியும் , தொழிலாளர் சங்கங்கள் பற்றியும் புரட்சிகரமாய் இவை உரையாற்றின . ஆனால் நடைமுறையில் , சங்கங்கள் என்றாலே திருச்சவைக்கு எட்டிகாயாயை போல கசக்கும் . தொழிலாளர் ஒற்றுமை , அவர்தம் உரிமைகள் என்ற சொற்களை கேட்டாலே கோபமும் , சோகமும் , திருச்சவை ' முதலாளிகளை ' கவ்விக் கொள்கிறது .
துணைவியாரை இழந்த பெரியவர் ஒருவருக்கு வயதுவந்த இரண்டு பெண் குழந்தைகள் . ஒருநாள் என்னிடம் வந்து , 'எதாவது வேலை பார்த்துக் கொடுங்கள் , வாழ்க்கையைத் தள்ளி விடுகிறேன் ' என்றார் . தமிழகத்தின் வடபகுதிகளில் வலுவாக காலுன்றி வளர்ந்திருக்கும் ஒரு அவையின் தலைவியை எனக்கு தெரியும். இவருக்காக அவர்களிடம் கேட்டேன் . ''மனமுவந்து'' சரிஎன்றனர். வெங்காலூரில் உள்ள ஒரு இல்லத்தை சொல்லி அவ்வில்லத்தின் தலைவியை போய் பார்க்கச் சொன்னார்கள் . நானும் போய் பார்த்தேன் . ஆளை வேலைக்கும் சேர்த்துவிட்டேன் . இரவுக் காவலர் பணி அவருக்கு . இரவில் கண் விழிப்பார். காலையில் சற்று ஓய்வு எடுப்பார் . ஒரு கிழமை கழித்துப் போய் அவரை பார்த்தேன். சோகமாய் இருந்தார் . பகலிலும் தோட்ட வேலை பார்க்கச் சொல்கின்றனர் என்றார் . நானும் செய்கிறேன் என்ன செய்வது ... என்றார் . எனக்கு தூக்கி வாரிபோட்டது . இல்லத்தலைவியை போய் பார்த்தேன் . அவர் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் உழைத்து மாதம் வெறும் ஐந்நூறு உருவா மட்டும் சம்பளம் கொடுகிறார்கள் . இம்மாதிரி லச்சகணக்கான தொழிலாளர்கள் கிருத்துவ நிறுவனங்களுக்குள் சிதறி கிடக்கிறார்கள் . ஒருங்கினைக்கபடாத தொழிலாளர்கள் என்று இவர்களுக்கு பெயர். குடும்ப சோகங்களை தாளாது இந்த வெம்மையை வாழ்நாளெல்லாம் சுமக்கும் வேதனை மனிதர்கள் , இல்லப் பணியாளர்கள் என்று எல்லா கிருத்துவ நிருவனங்களுக்குள்ளும் வைத்திருகிறார்கள் , சமைக்க , இல்லத்தை தூய்மை படுத்த , காவல் காக்க, என்று பல்வேறு பணிகளை கொடுகின்றனர் . இவர்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட பணி நேரம் இதுதான் என்று கிடையாது. ஆண்டு விடுமுறை கிடையாது. உழைக்க வேண்டும் . மாடு மாதிரி உழைக்க வேண்டும் . தொழிலாளர்களுக்கு விடுப்பு நாட்கள் இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது . நடைமுறை இப்படியிருக்க ,
இந்த திருச்சவையின் புரட்சிகர அறிவிப்புகள் எல்லாம் இந்த உழைப்பு பற்றி , சம்பளம் பற்றி, எதாவது சொல்கிறது என்றால் 'ஆம் ' . வாய் கிழிய பேசுகிறது . ஒரு தொழிலாளியின் மாத சம்பளமானது , அவரது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்கு . குடும்பத் தலைவியும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கும் அளவிற்கு சம்பளம், ( வீட்டுத் தலைவி வீட்டிலிருந்து பிள்ளைகளை கவனிக்க வேண்டுமாம் ) , ஆண்டிலோருமுறை மகிழ்ச்சி பயணம் திருப்பயணம் செல்ல பணம், மருத்துவசெலவுக்கு பணம் , எதிர்கலத்திற்காக சேமித்து வைக்க பணம் , ஒரு இல்லம் அமைத்துக்கொள்ள பணம் , என்று நீண்டு கொண்டே போகிறது . துறவியர் பேரவை கூட்டங்கள் , மறை மாவட்ட அறிக்கைகள் சில நேரங்களில் இச்சம்பளம் பற்றி பேசும்போது மாதத்திற்கு 500 அல்லது 600 என்று குத்துமதிப்பாக சொல்லுவார்கள் . இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுவார்கள் . ( இந்த சம்பளத்தை வைத்து நாக்கு வழிக்கவா?) அதாவது பல இடங்களில் இது கூட கொடுப்பதில்லை என்று தானே அர்த்தம் . ஆகவே இந்த தொகையே பெரிய கருணை செய்து கொடுக்கும் தொகையாம். இதை செயல்படுத்கிற பெரிய பாக்கியவான்களும் புன்னியவதிகளும் என்ன செய்வார்கள் என்றால் , சம்பளத்தை கையில் கொடுத்துவிட்டு தங்கியிருக்கிற இடத்துக்கு வாடகையாக 150 கொடு , உனக்கு போடுகிற உணவுக்கு ஒரு 200 கொடு என்று பிடுங்கிவிட்டு மிச்ச மீதியை கையில் திணித்துவிட்டு போய்விடுவார்கள் . தொழிலாளர்கள் தங்குவதற்கு கோழிக்கூண்டு போல் சின்ன ஒரு குகையை கொடுப்பார்கள் . பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த இருட்டறையை கொடுப்பார்கள் . செத்தொழிய வேண்டிய தலைமுறை இது.
கேரளாவில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன , அங்கே இப்படி வாலாட்ட முடியாது . ஆகவே கேரளாவிலுள்ள துறவற இல்லங்களுக்கு தமிழக இளைஞர்களையும் , இளம் பெண்களையும் வேலைக்கு அனுப்பும் முகவர் வேலைகளை இங்குள்ள ''துறவற முதலாளிகள் '' இப்போது செய்கின்றனர்.
வறுமையும் , பசியும் , பிணியும் , வாட்டும் உலகமிது . தொழிலாளர்கள் , தங்கள் குடும்பத்தையும் , தங்களையும் எப்பாடு பட்டாவது இவற்றிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் .என்று இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் . நீதி , சமத்துவம், பற்றி ஊருக்கு கதை அளக்கிற கும்பல் இப்படி தங்களிடம் வந்து மாட்டிகொள்ளும் உழைப்பாளர்களை ஈவு இரக்கமின்றி கசக்கிப் பிழிவதும், அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை சுரண்டுவதும் கலப்படமற்ற மனித உரிமை மீறல்களே!
திண்டிவனம் தொழிலாளர்கள் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் ஒரு பிரச்சினை . ( இன்று வரை தீர்கபடாத பிரச்சினை ) 32 தொழிலாளர்கள் திடுதிப்பென வேலை நீக்கம் செய்யபடுகின்றனர் . ஊதிய உயர்வு கேட்டார்கள், அதை அடைய தங்களுக்குள் சங்கம் அமைக்க முயன்றனர் , இதுதான் காரணம். போராட்டம் மூண்டது. திருச்சவையின் துறவிகளே சிலர் இந்த நியாயமான தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சிறை சென்றனர், ஆனால் வேலை நீக்கம் செய்த நிறுவனம் பொய் பிரச்சாரத்திற்கு , சுவரொட்டிகளுக்கு , காவல் துறையினருக்கு கையூட்டு , வன்முறைக்கு , என ஏராளமாய் செலவு செய்தது. ஒடுக்குவதற்கு செய்த செலவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் கேட்ட தொகையை விட அதிகம் கொடுத்திருக்கலாம் .
அதே நேரத்தில் , ஆயர்களும் , துறவற அவைத்தலைவரும் நீதி , நியாயம், எங்கிருக்கிறது என்று பார்கவில்லை . திருச்சவையின் நிறுவனம் ஒன்றை தெருவுக்கு இழுக்கலாமா? என்று அழுகிய புண்ணை மூடி மறைத்தனர் . இவர்களுக்கு 32 தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, அழுகி , நாறிப்போன நரகல் இருப்பது தெரியகூடாது .அவ்வளவுதான் , உள்ளே நரகல் இருக்கிறது என விளம்பரபலகை போட தேவையில்லை . அதுவே தனது வாடையால் விளம்பரம் தேடிக்கொள்ளும் .
இயேசு புரட்சியாளராகவும் , நீதி உணர்வு நிறைந்தவராகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலைப்பாடு எடுதவருமாய் இருந்தார் . அவர் அப்படியிருக்க அவரை மிக அருகில் பின் பற்றுவதாயும் அவராலேயே அழைக்கபட்டவராயும் கூறும் துறவிகள் மட்டும் என் இப்படி மனிதத்தன்மை இழந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள் ? எனும் வினா எழுகிறது. இயேசுவை விட்டுவிடுங்கள் துறவிகளாய் ஆகிறவர்கள் , நிறுவனங்களுக்குள் அதிகாரத்தை சுவைப்பவர்கள் எல்லாம் வனத்தில் இருந்து வந்தவர்களா? அவர்களும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு அறிந்தவர்கள்தானே. எப்படி இப்படி மாறிபோகிறார்கள்? எப்படி கடந்தவைகளை மறந்து விடுகிறார்கள் ? மறக்கடிக்கிற ஒரு உருவாக்கம் அவர்களுக்கு 'ஏற்படுகிறது '. அவ்வுருவாக்கத்தில் நடப்பதுதான் என்ன? .....
தொடரும் ....
No comments:
Post a Comment