விடுதலைப்புலிகள் அமைப்பில் துணை அரசியல் பொறுப்பாளராக இருந்த விஜிதரன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன் ஆகிய எனது கணவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
எனினும் சரணடைந்ததற்குப்பின் அவர் தொடர்பில் எதுவித தகவல்களும் இல்லை.ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை அரசு சுட்டுக்கொலை செய்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு ரவிச்சந்திரன் அறிவொளி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று நண்பகல் சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலர் பிரிவு மற்றும் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்தது. சித்தன்கேணி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இவ் விசாரணைகளின் போது சாட்சியமளித்த வட்டுக்கோட்டை அராலி மத்தியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அறிவொளி தெரிவித்ததாவது,
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுமாத்தளனை நெருங்கிய இராணுவத்தினர் மக்களின் குடியிருப்புக் கள் மீது தாக்குதலை அகோரமாக மேற்கொண்டனர். இதன்போது ஏப்ரல் 2ஆம் திகதி காயமடைந்த நான் ஐ.சி. ஆர்.சி. கப்பல் மூலம்
திருகோணமலைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டேன்.
எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் துணை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த விஜிதரன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறை வடைந்த பின் யூனில் ஓமந்தை இராணுவத்திடம் எனது சகோதரனுக்கு முன் சரணடைந்தார். எனினும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் எனது கணவர் தொடர்பான எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.
எனது கணவரைத்தேடி பூஸா, வெலிக்கந்தை முகாம்களுக்கு நேரில் சென்றதுடன் ஐ.சி.ஆர்.சி., மனித உரிமைக்குழு என எல்லாவற்றிலும் முறைப்பாடு செய்தும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அரசாங்கம் சுட்டுக் கொன்றுவிட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது. எனவே எனது கணவர் தொடர்பான தகவல்களை பெற்றுத் தாருங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிவொளி ரவிச்சந்திரன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment