வடக்கில் உள்ள பணியகங்களை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் ஊடக இணைப்பாளர் சரசி விஜேரத்ன தகவல் வெளியிடுகையில்,
“ யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள பணியகங்களை மூடிவிடும்படி சிறிலங்கா அரசாங்கம் கேட்டுள்ளது.
வடக்கில் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துமாறும் எம்மிடம் அரசாங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசாங்கம் இதுவரை எந்தக் காரணத்தையும் கூறவில்லை.
ஆனால் கொழும்பில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் பணியகம் தொடர்ந்து இயங்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த சில நாட்களில் முக்கியமான அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படும்.
இந்தப் பேச்சுக்களின் மூலம் அரசாங்கத்துடன் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.
அதேவேளை வடக்கிலுள்ள பணியகங்களை மூடுவதற்கு அரசாங்கம் எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கவில்லை.
இதுதொடர்பாக அரசாங்கத் தரப்புடனானக பேச்சுக்களின் போது தெளிவான விளக்கத்தைப் பெற முடியும் என்று நம்புகிறோம்“ என்று தெரிவித்தார்.
போர் நடைபெற்ற காலங்களில் அனைத்துலக செஞ்சிலுகைக் குழு பொதுமக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியிருந்தது.
போர் முடிவுக்கு வந்ததை அடுத்து கிழக்கில் இருந்து செஞ்சிலுவைக் குழுவை வெளியேற்றிய சிறிலங்கா அரசாங்கம் தற்போது வடக்கில் இருந்தும் அவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
அனைத்துலக செஞ்சலுவைக் குழு வழங்கிய இரு சக்கர உழவு இயந்திரங்கள் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட போது அதில் அரசதரப்பின் தலையீடுகளால் பெரும் சர்ச்சை உருவாகியதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment