Friday, December 10, 2010

பிரிட்டன் கருத்துச் சுதந்திரமற்ற நாடு-சொல்வது இலங்கை

சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிரிட்டன் கருத்துச் சுதந்திரமற்ற நாடு என்று காட்டமாகச் சாடியிருக்கின்றார்
இதற்கு முன் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பிரிட்டன் சென்றிருந்த சமயங்களில் அவர்களைக் கைது செய்யும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஆயினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

அவ்வாறான நிலையில் எமது ஜனாதிபதிக்கும் தேவையான பாதுகாப்பை பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் லண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜோர்ஜ் புஷ் அதிகாரத்தில் இருந்த வேளையில் பிரிட்டனுக்கான விஜயமொன்றை மேற்கொண்டபோது அவருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடக்கத் தான் செய்தது. ஆயினும் அந்நாட்டுப் பாராளுமன்றத்திலும் அவர் உரையாற்றிய பின்பே அங்கிருந்து புறப்பட்டார் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆயினும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையை இரத்துச் செய்ததன் மூலம் பிரிட்டன் கருத்துச் சுதந்திரமற்ற நாடு என்பதை வெளிக்காட்டிக் கொண்டு்ள்ளதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்.

அது மட்டுமன்றி அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட அனைத்து மேற்கு நாடுகளும் புலிகளை அரவணைத்து இலங்கையின் பிரிவினைவாதத்துக்குத் தூபம் போட்டன. அதே போன்று நாங்களும் அல்கைடா தீவிரவாதிகளை அரவணைத்து அடைக்கலம் கொடுத்திருந்தால் அந்த நாடுகள் எங்களைச் சும்மா விட்டிருக்குமா? இவ்வாறான நிலையில் தான் எமது எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களும் ஒரு சில தன்னார்வ நிறுவனங்களும் இலங்கையின் புகழைச் சிதைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் துணைபோகின்றன. அதனைத் தடுப்பதற்கு அமெரிக்காவைப் போன்று நாமும் புதிதாக தேசப்பற்று சட்டமொன்றை இயற்ற வேண்டும்.

அதன் மூலமாக நாட்டுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கி, இந்நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதம் தலைதூக்காதவாறு பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு புறத்தில் இலங்கையில் பிரிவினையை ஆதரிப்பதில் ஒரு காலத்தில் பிரிட்டனும் பங்களித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், அந்த வகையில் தற்போது அந்நாடு புலிகளின் ஆதிக்கத்துக்குட்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்

No comments:

Post a Comment