இலங்கையரின் எதிர்கால ஐரோப்பிய பயணங்களுக்கு புலிகளின் முக்கியஸ்தர் நெடியவனிடம் இருந்து வீசா பெற வேண்டிய நாள் வெகு விரைவில் உருவாகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்வு கூறுகின்றார்.

http://www.eeladhesam.com/images/breaking/nediyavan.jpgகொழும்பில் நடைபெற்ற  ஊடகவியலாளர்கள் மகாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தமிழர்கள் என்கிற சொல்லை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில் இவர்களுக்கு இலங்கை என்கிற சொந்த நாடு உண்டு. பொருளாதார நோக்கங்களுக்காகதான் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறி உள்ளனர். வெளிநாடுகளில் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இலங்கைக்குள் தனி நாடு ஒன்றை கோரி நிற்கின்றார்கள்.

பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் தேர்தல் காலங்களில் புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தங்கி இருக்கின்றன புலி ஆதரவு சக்திகளின் நிதி தேர்தல் பிரசாரங்களின்போது இந்நாடுகளின் அரசுகளுக்கு தேவையாக உள்ளது. ஆகவே இவ்வரசுகள் புலிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

அங்குள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் தமிழ் மக்களின் வாக்குக்களுக்காகவும், புலிகள் இயக்கத்தால் தேர்தல் பிரசாரங்களுக்காக வழங்கப்படுகின்ற நிதிக்காகவுமே முக்கியமாக புலிகளை ஆதரித்து வந்தனர் என்பது தற்போது பகிரங்கமாகி விட்டது.

பிரித்தானியாவில் தற்போது கருத்துச் சுதந்திரம் இல்லை. அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகரை பிரித்தானியா கைது செய்துள்ளது.

இக்கைதை பிரித்தானியா மேற்கொள்வதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதி விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.

மேலைத்தேய நாடுகளின் தவறுகளை வெளிப்படுத்துவோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் கைது செய்யப்பட்டிருக்கின்றமை வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அமெரிக்கா தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் மீது வீசி 650,000 பொதுமக்கள் வரையானோரை படுகொலை செய்து உள்ளது.

அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் இலங்கையில் நடக்காத போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை கோரி பலரும் குரல் எழுப்புவது தான் வேடிக்கையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.