Friday, December 17, 2010

நிதியுதவிகள் குறைக்கப்பட்டதால் உணவு நிவாரணம் நிறுத்தப்படும் ஆபத்து - ஐ.நா பணியகம் எச்சரிக்கை

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு நிவாரண உதவிகள் தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா பணியகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் அனைத்துலக உதவி நிறுவனங்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர்.

குறிப்பாக அத்தியாவசிய உணவுத் தேவைகளுக்காக அனைத்துலக உதவி நிறுவனங்களின் உதவியை இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் எதிர்பார்க்கின்றனர்.

சிறிலங்காவுக்கான கொடையாளர்களின் நிதியுதவிகள் குறைக்கப்பட்டால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உதவி விநியோகங்களை நிறுத்தும் நிலை ஏற்படும்.

கடந்த மாதம் 286.370 பேர் உலக உணவுத்திட்டம் ஊடாக உணவு நிவாரணங்களைப் பெற்றனர்.

கொடையாளர்களின் நிதியுதவிகள் குறைக்கப்பட்டதால், கடந்த மாதமே கோதுமை மற்றும் சீனி போன்றவை பாதியாகக் குறைக்கப்பட்டன.

நிதி நெருடிக்கடிகளால் அடுத்த மாதம் சோளம், சோயா விநியோகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


அடுத்த ஆண்டில் 371,000 பேருக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதற்கு 24 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுகிறது.


நிதிப் பற்றாக்குறையினால் அநேகமான உதவி நிறுவனங்கள் உதவிகளை வழங்க முடியாத நிலையை அடைந்துள்ளன.

தற்போதைய நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் வரையிலுமே உதவிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.

தொடர்ச்சியாக நிவாரணங்களை வழங்குவதற்கு கொடையாளர்களின உதவி மிகவும் அவசியம்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உதவிகள் முக்கியமானவை.

மீளக்குடியேறியோரில் 18 வீதமான குடும்பங்களுக்கு பெண்களே தலைமை தாங்குகின்றனர்.

இவர்களுக்கு சிறப்பாக, ‘பயிற்சிக்காக உணவு‘ என்ற திட்டத்தை மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தஆண்டில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்காக 170 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்தது என்று ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணியகம் அறிவித்துள்ளது.

அதேவேளை, வடக்கு,கிழக்ல் அனைத்துலக உதவி நிறுவனங்களை அரசாங்கம் சுதந்திரமாக செயற்பட விடாமல் தடுத்து வருவதை அடுத்தே கொடையாளர்கள் ஐ.நா ஊடான உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment