Friday, February 18, 2011

போர்க்குற்ற விசாரணைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்: 41 எம்.பி.க்கள் கோரிக்கை

போர்க்குற்ற விசாரணைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்: 41 எம்.பி.க்கள் கோரிக்கை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குப் பிரிட்டன் ஆதரவளிப்பதாகத் தெரிவிக்க வேண்டும் என பிரிட்டனின் முக்கிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுக் கடிதம் ஒன்றை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனிடம் கையளித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இக்கடிதம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கக் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம். இலங்கையின் கடந்த 25 வருடகால உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள தாங்கள் தங்களது எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தி வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியே இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்கனவே இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு அவ்வாறான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி கடிதம் எழுதியுள்ளதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதனைப் பலப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

போரின்போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் 2009 ஒக்ரோபரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பொலிஸாராலும், அரசில் உள்ள பொறுப்பு வாய்ந்த நபர்களாலும், பாதுகாப்புப் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் அதி உச்சத்திலிருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

அரசியல் படுகொலைகள் உட்பட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் பரந்தளவில் நடைபெற்றதை அது எடுத்துக் கூறியது. அது அரசியல், குடியியல் உரிமைகள் ஆகியவற்றை ஒடுக்கியது. படையினரால் திட்டமிடப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் அரசுடன் தொடர்புடைய இராணுவத் துணைக் குழுக்கள், பொலிஸார் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் குறித்தும் அது வெளிப்படுத்தியது.

அடுத்த மாதத்தில் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டியிருந்த ஏராளமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

பொதுமக்கள் மீதும், மனித உரிமை அமைப்புக்களின் நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்துதல், ஆயுதந் தாங்காத பொதுமக்களையும் முன்னாள் போராளிகளையும் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைத்தல், துஷ்பிரயோகம் செய்தல், கைது செய்யப்பட்டவர்கள் அல்லது சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தல், தனிப்பட்ட காணாமல் போதல்கள் ஆகியவை குறித்தும் அது அறிக்கையிட்டிருந்தது.
ஆகவே போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து போதுமான அளவு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்த விசாரணைகள் சுதந்திரமாக மேற்கொள்ளப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள எமது நண்பர்கள் நம்புவது போலவே சுதந்திரமான விசாரணை ஒன்றுதான் நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்த கடந்தகால விசாரணைகள் வெற்றியளிக்கவில்லை; நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதனால்தான் உலகம் முழுவதுமுள்ள அமைப்புகள் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றன.

உள்நாட்டில் விசாரணை நீதியான முறையில் நடத்தப்படாதபோது அரசியல் வலு நியாயமானதாக இல்லாத போது குற்றஞ்சாட்டப்பட்ட விடயங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியம். அவை இல்லாதபோது உள்நாட்டு மோதல்களுக்கு இலங்கையின் மாதிரியை ஏனைய நாடுகளும் பின்பற்ற முனையும் என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து விசாரிக்கவும், காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கவும் என 1991இலிருந்து ஏற்கெனவே இவ்வாறான ஒன்பது விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அரசின் தலையீடு, தாமதமான விசாரணை, நற்பெயரை இழந்தமை ஆகிய பல்வேறு காரணங்களால் ஆணைக்குழு உறுப்பினர்கள் பலர் தாமாகவே பதவி விலகினர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் விசாரணைக்குழு ஏற்புடையதல்ல என்று மூத்தோர் அவையைச் சேர்ந்த டெஸ்மன்ட் டுட்டுவும், லக்தார் பிரகிமியும் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் இது தொடர்பில் இராஜாங்கத் திணைக்களத்துக்கு எழுதியுள்ளமை சர்வதேச சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதுதான் பிரிட்டனினதும் பெரும் ஈடுபாடாக இருக்க முடியும். நீண்டகால இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரத் தீர்வைத் தரக்கூடியதாக இருக்கும்.
எவ்வாறாயினும் முழு உண்மைகளையும் தெரிந்தும் புரிந்தும் கொண்டாலே சமாதானத்தை எட்டலாம் என நாம் நம்புகிறோம்.

இத்தகைய காரணங்கள் பலவற்றாலும் பாரபட்சமற்ற முறையிலும் ஆரோக்கியமான வகையிலும் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு அதன் ஊடாக போரின்போது என்ன நடைபெற்றது என்ற முழு உண்மையும் வெளிக்கொணரப்பட வேண்டும்.

அதுதான் இலங்கையின் நிரந்தரமான சமாதானத்துக்கு ஆதரவாக அமையும். எனவே அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இப்படிக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment