போரின் இறுதி நாட்களிலும், போர் முடிவுக்குவந்த கையோடும் சிறிலங்காவில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்செயல்கள் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொண்டு குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துமாறு 'பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவதை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினது குழு' [The Committee on the Elimination of Discrimination against Women - CEDAW Committee] சிறிலங்காவினைக் கோரியிருக்கிறது.
ஐ.நாவின் மனித உரிமை ஆணையகம் முன்மொழிந்திருப்பதைப் போல போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை மீறல்களை முறையாக விசாரிக்கும் வகையிலான அனைத்துலகக் கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பாக ஆராயுமாறு இந்தக் குழு சிறிலங்காவினைக் கோரியிருக்கிறது.
போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல்சார் வன்முறைகள் தொடர்பாக ஆவணமொன்றை பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவதை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினது குழு சமர்ப்பித்திருந்தது.
குறிப்பிட்ட இந்த ஆவணத்தில் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான புதிய சட்ட முறைமைகள் கைக்கொள்ளப்படவேண்டும் எனக்கூறும் இந்த குழு, மோதல்களில் பாலியல்சார் வன்முறைகள் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு எதிரான ஒரு குற்றமாகக் கருதுமாறு ஐ.நாவினைக் கோரியிருந்தது.
பாலியல்சார் வன்முறைகளை ஒரு குற்றமாகக் கருத்திலெடுக்க மறுப்பது பாலின் அடிப்படையிலான பாரபட்சம் என வாதாடும் ஐ.நாவின் இந்தக் குழு தற்போதைய நடைமுறையினை மாற்றும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோருகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்தேறிய அனைத்துக் குற்றங்களும் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவதை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையினது இந்தக் குழு அழைப்பு விடுத்திருக்கிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பல காத்திரமான ஆதாரங்களை வைத்திருக்கின்போதும் இதனை விசாரிக்கும் வகையிலான உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
"இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியலான வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய கட்டாய கடப்பாடு சிறிலங்காவிற்கு உள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சிறிலங்கா நீதியின் முன் நிறுத்தவேண்டும்" என அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையத்தின் மனித உரிமை நிகழ்ச்சித் திட்டத்தின் முகாமையாளர் அனா வொண் கோல் [Anna von Gall] கோருகிறார்
No comments:
Post a Comment