Saturday, February 12, 2011

கப்பலில் வந்தோரை தடுத்து வைத்திருப்பதற்கான கனேடிய அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி


இதன் காரணமாக கனடாவின் பாதுகாப்பினை நாடி வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தமது சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் மாதக் கணக்காக வரியிறுப்பாளர்களின் பெருந்தொகை செலவில் தங்கியுள்ளனர்.
'சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை' என சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த குளோறியா நவ்ஷிகா
கூறியுள்ளார். 'அகதிக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நடவடிக்கையானது எப்பொழுதும் இறுதிக் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதுவும் ஏனைய முயற்சிகள் முடியாமல் போகும் அல்லது தோல்வியில் முடிவடையும் பட்சத்தில் மாத்திரமே செய்ய வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
அநேகமான அகதிக் கோரிக்கையாளர்கள் கனடாவை வந்தடைந்ததும் தடுத்து வைக்கப்படுவதில்லை. வழமையாக அவர்கள் சில தினங்களில் அல்லது சில வாரங்களில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஆனால் எம்.வி.சண் சீ' கப்பலில் வந்த பயணிகளைப் பற்றிய விரோதமான தகவல்களின் அடிப்படையில், அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உடையவர்களெனக் கிடைக்கப்பட்ட ஏற்றுக் கொள்ள முடியாத மேலோட்டமான, வலுவற்ற தகவலின் அடிப்படையில் வழமைக்கு மாறாக அவர்களது அடையாளங்களை நிரூபிக்கக் கூடிய மேலதிக ஆதாரங்களை கண்டறிவதில் கணிசமான அளவு சக்திகயையும், மூலவளங்களையும் அரசு செலவிட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் குழந்தைகளுடன் இருக்கும் அவர்களை விடுதலை செய்வதற்கு குடிவரவு அகதிகள் சபை மறுப்புத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்வதற்கு சமஷ்டி நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது.
துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிவரும் மக்களை எவ்வாறு நடாத்த வேண்டும் என்பதில் நாம் நீதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும்' என கனடா அகதிகள் சபைத் தலைவர் வண்டா யமமோட்டோ கூறியுள்ளார். 'அவர்கள் தரை மார்க்கமாக, ஆகாய மார்க்கமாக, கடல் மார்க்கமாக வந்தாலும் அனைவரும் ஒரே முகமாகவே நடாத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இக்கோரிக்கையாளர்களை மாத்திரம் தனிமைப்படுத்தி கொடூரமாக நடாத்துவது பாரபட்சமாகும்' எனவும் கூறியுள்ளார்.
எம்.வி.சண் சீ'கப்பலில் வந்தவர்களுக்காக அரசாங்கத்தினால் செலவு செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகை கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது எவ்வளவு பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
இக்கப்பல் தொடர்பாக கனடா எல்லைச் சேவை முகவர் நிலையத்துக்கு ஏற்பட்ட செலவுகள் நேரடியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த செலவுகளுடன் இணைக்கப்பட்டு 22 மில்லியனுக்கு மேலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு அகதிகள் சபை தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு ஏற்பட்ட செலவு 900,000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் 'எம்.வி.சண் சீ' கப்பலில் வந்தோரை ஏனைய அகதிகளை நடாத்துவது போன்று நடாத்தி நம்பத்தக்க அளவு அடையாளம் கிடைத்ததும் விடுவித்திருந்தால் பெருமளவு செலவினைக் குறைத்திருக்கலாம்.
தற்போது அதிகமாக உள்ள செலவு, அரசாங்கம் கொண்டு வரவிருக்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான C-49 மசோதா அமுல்படுத்தப்பட்டு அகதிகள் ஒரு வருட காலத்துக்கு கட்டாயமாக தடுத்து வைக்கப்படும் போது மேலும் அதிகரிக்கும்.
முன்னர் 'ஓசன் லேடி' கப்பலில் வந்த பயணிகளின் மூலம் ஏற்பட்ட அநுபவமானது நீண்ட கால தடுப்பு முறை முற்றாகத் தேவையற்ற ஒன்றாகும் எனப் புலப்படுத்தி உள்ளதாக கனடா தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். 'ஓசன் லேடி'கப்பலில் 2009ம் ஆண்டு வந்த அனைவரும் தமக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை கடைப்பிடித்து வந்துள்ளனர். ஒருவராவது தலைமறைவாகவில்லை.
ஆனால் 'எம்.வி.சண் சீ' கப்பலில் வந்தோரை தடுத்து வைத்திருப்பது அவர்களுக்கு அநீதியானதும், நியாயமற்றதும் ஆகும். அத்துடன் வரியிறுப்பாளருக்கும் அதிக செலவாகும்.

No comments:

Post a Comment