[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 01:46.25 AM GMT ]
தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் வீர வணக்கங் கூட்டங்கள் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அவரது நினைவேந்தல் கூட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும் நகரங்களிலும் இடம் பெற்றன.
தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் சிங்கள - பௌத்த வெறிபிடித்த அரசின் அடக்குமுறைக்கும் அச்சறுத்தலுக்கும் மத்தியிலும் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். ஆனால் சிங்கள - பௌத்த அரசுக்கு சேவகம் செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது அவரது கட்சியினரோ பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டால் தங்களது சிங்கள எசமானர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக வேண்டும் என்ற பயமே காரணமாகும்.
டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாண மாநகர சபையில் பார்வதி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொண்டுவந்த போது தேவானந்தாவின் அடிவருடியான முதல்வர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
அவருக்கு சூடு, சொரணை, மானம், வெட்கம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க அதனை ஏற்றால் தனக்குப் படியளக்கும் எசமானர்கள் கோபித்துக் கொள்வார் என்ற பயம் அவருக்கு.
மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவது ஒரு குறைந்த பட்ச அரசியல் நாகரிகம் ஆகும். ஆனால் அந்தக் குறைந்த பட்ச நாகரிகம் கூட இந்த இரண்டகர்களிடம் இல்லாதிருக்கிறது.
உலகத் தமிழ் இனத்தின் தாய் என அன்போடு போற்றப்படும் பார்வதி அம்மாளின் சாம்பல் மீது மனித பண்பாட்டுக்கு அறைகூவல் விடுமாறு மகிந்த அரசு மேற்கொண்ட கீழ்த்தரமான, அருவருப்பான, கோழைத்தனான, அசிங்கமான, காட்டுமிராண்டித்தனமான ஈனச் செயலைக் கூட ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர்களால் கண்டிக்க முடியவில்லை.
தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தின் போது அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து அதன் முதுகில் குத்தினார்கள் என்று பார்த்தால் இப்போதும் அவர்களது துரோக வரலாறு தொடர்கிறது.
யாழ்ப்பாண மாநகர சபைக்கு இயல்பான சூழ்நிலையில், நேர்மையான முறையில், சுதந்திரமான தேர்தல் நடந்திருந்தால் ஈபிடிபி கட்சி மண் கவ்வியிருக்கும். ஆனால் தேர்தல் அப்படி நடைபெறவில்லை. துப்பாக்கி முனையில் வாக்காளர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பரப்புரைக்கு அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டன. சிங்கள இராணுவமும் ஐக்கிய மக்கள் முன்னணி அமைச்சர்களும் ஈபிடிபி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.
திருமகள்
No comments:
Post a Comment