Saturday, February 26, 2011

விடுதலைப் போரில் சிறைவாசம்

ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது. பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கிறது. உயிரிழப்புக்கள் இல்லாமல் போரிடுவது முற்றாக இயலாத காரியம். விடுதலை என்பது இரத்தம் சிந்திப் பெற்றுக்கொள்ளப்படும் புனிதமான உரிமை.
காலம் காலமாக விடுதலைப் போரில் ஈடுபடும் பெருந் தலைவர்கள் சொன்ன அனுபவ அடிப்படையிலான கருத்துக்களின் பிழிவை இதன் மேல் தந்துள்ளோம். ஓரு விடுதலை வீரன் எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காகத் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறான்.
அல்லது தன்னால் தப்பி ஓட முடியாத அளவுக்குக் காயம் பட்டால் தனது சகாக்களில் ஒருவனுக்குத் தன்னைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். இது விடுதலைப் புலிகள் நிறுவிய மரபு.
விடுதலைப் போரில் சிறைவாசம் என்பது வரலாற்றில் நாம் பலமுறை சந்திக்கும் நிகழ்ச்சி. இன்று உயிரை தக்க வைத்தால் நாளை போரிட முடியும். என்பது சிறைவாசம் அனுபவிக்கும் விடுதலை. வீரர்களின் கருத்து. போராட்ட வடிவங்களின் மாறுபட்ட வடிவமாகச் சிறைவாசத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
சாகும் வரை உண்ணாவிரதம் இறுதி இலக்கு வரை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகளின் மரபுக்கு நிகரானது. உண்ணா நோன்பை உணவும் நீருமின்றி நடத்தி உயிர் விட்டோர் மிகச் சிலரே. மாவீரன் திலீபனும் ஆந்திரா தோன்றக் காரணமான பொட்டி சிறி றாமுலுவும் நினைவுக்கு வருகின்றனர்.
காய்ச்சிய ஆட்டுப்பாலில் பாதாம் பருப்புப் பொடி கலந்து குடித்தபடி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மகாத்மாக்கள் பற்றி அறிவோம். என்னைச் சாகவிட்டு விடாதீர்கள், பேரம் பேசி என்னுயிரை மீட்டுவிடுங்கள் என்று அதே மகாத்மா சொன்னதாகவும் அறிகிறோம்.
காலையில் படுத்து மதியம் எழுந்து காலை மதிய உணவுகளுக்கு இடையிலான சொற்ப நேரத்தைச் சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு ஒதுக்கிய தமிழகத் தலைவரையும் நாம் அறிவோம். அவரைப் பற்றி அதிகம் சொன்னால் இது களங்கப்படும். என்பதையும் நன்கு அறிந்துள்ளோம்.
இந்திய விடுதலை வரலாற்றில் சிறைவாசம் என்பது தீவிரமான போராட்ட வடிவம். தலைவர்கள் சிறை சென்ற வரலாற்றை விட பெயரறியா இளைஞர்களும், மாணவர்களும், வறியோர்களும், சிறியோர்களும் சிறை சென்றார்கள் விடுதலைப் போர் வெற்றிப் பெற்ற பின் நல்ல அறுவடை செய்தவர்களும் இருக்கிறார்கள்.
தனது இனத்தின் விடுதலைக்காக மிக நெடிய காலம் சிறை வாழ்வை அனுபவித்த பெருந்தலைவர் இன்றும் உயிரோடு இருக்கிறார். அவர் 93 வயதை நெருங்கிவிட்டார். (பிறப்பு 1918 யூலை 18) அவர் 27 வருடம் 6 மாதத்தைத் தொடர்ச்சியாகச் சிறையில் கழித்தார். பெயர் நெல்சன் மண்டேலா.
காந்தி, நேரு போன்றோருக்கு இந்த அனுபவம் கிடைக்கவில்லை. இவர்கள் சிறை சென்றார்கள், வெளியே வந்தார்கள், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்றார்கள். இவர்களை ஆட்சியாளர்கள் அரசியல் கைதிகளாக நடத்தினார்கள். அரசியல் கைதிகளுக்குரிய சலுகைகளை அவர்கள் பெற்றார்கள்.
மண்டேலாவுக்கு அது கிடைக்கவில்லை. தென்னாபிரிக்கப் பெருநிலப் பரப்பு கேப் ரவுண் (cape town ) நகரின் கடற்கரையோரத்தில் இருந்து 18 மைல் தூரத்திலிருக்கும் றோபென் தீவில் (r0bben island ) அடைபட்ட போது கல்லுடைக்கும் வேலையில் ஈடுபட்டார்.
பிற கைதிகளோடு இணைந்து அவர் கடப்பாரை, சம்மட்டி போன்ற கருவிகளால் பாறைகளைப் பிளந்து சிறு கற்களாக்கும் பணியில் காலை தொடக்கம் மாலை வரை பணியாற்றினார். இரவில் சிறிது நேரம் படிக்கும் உரிமையைப் போரிட்டுப் பெற்றார்.
சிறை வாழ்க்கையின் போது நேரு இரு முக்கிய வரலாற்று நூல்களை எழுதினார். கண்டுணர்ந்த இந்தியா (discovery of india ) மகளுக்குக் கடிதங்கள் (letters to my davghter-indira gandhi ) என்பனவாகும்.
படிக்க அனுமதிக்கப்பட்டாலும் தனது போராட்டம் அடங்கிய வாழ்க்கை நூலை எழுதுவதற்கு நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்படவில்லை. நண்பர்கள் உதவியோடு அவர் கிடைத்த பேப்பர் துண்டுகளில் இவற்றை எழுதினார். இரகசிய முறையில் பிரதியாக்கம் செய்த பக்கங்களை வெளியிடத்திற்கு அனுப்பினார்.
மூலப் பிரதியைப் பாதுகாப்பாக மண்ணில் புதைத்து வைத்தார். அது சிறிது காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்கான அவருடைய இரவில் படிக்கும் சலுகை மீளப் பெறப் பட்டது. வெளியே அனுப்பிய பிரதிகளை அவர் பிற்காலத்தில் விடுதலை நோக்கிய நீண்ட பயணம் (long walk to freedom ) என்ற வாழ்க்கை நூலாக்கினார்.
நெல்சன் மண்டேலா றோபென் தீவில் அடைப்பட்டிருந்த காலத்தில் அவருடைய முதலாவது மகன் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்ததை அறிந்தார். இறுதி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு அவர் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
கை விலங்கு கால் விலங்கு பூட்டும் வழக்கம் றோபென் தீவிலும் பிற தென்னாபிர்pக்கச் சிறைகளிலும் இருந்தது. நெல்சன் மண்டேலாவுக்கு இந்த வகைக் காப்புகள் அணிந்த அனுபவம் நிறைய உண்டு.
அவர் சுகயீனம் அடைந்த போது கேப் ரவுண் மருத்துவமனைக்குப் படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்குக் கால் விலங்கு கை விலங்கு பூட்டப்பட்டது. மருத்துவ மனையில் அவருக்கு காச நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி காணப்பட்டது.
அவருடைய நுரை ஈரலில் இருந்து இரண்டு லீற்றர் திரவம் ஊசி மூலம் அகற்றப்பட்டது. மிகக் குறிய காலம் அவர் மருத்துவமனையில் தங்க அனுமதிக்கப்பட்டார். றோபென் தீவில் சிறைப் பட்டிருந்த காலத்தில் ஐ.சி.ஆர்.சி பிரதிநிதிகள் வருடமொரு முறை கைதிகளைப் பார்க்க வருவார்கள்.
அவர்களுடைய தயவால் கைதிகளுக்கு வழங்கப்பட்ட அரைக் கால்சட்டையும் வானத் ரயரில் செய்த செருப்பும் நிறுத்தப்பட்டன. அதற்குப் பதிலாக நீண்ட கால்சட்டையும் சப்பாத்தும் வழங்கப்பட்டன. சிறை உணவிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
நெல்சன் மண்டேலா சமாதனப் பிரியர் என்பது உண்மையானாலும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் இராணுவப் பிரிவை உருவாக்கியவர் அவர்தான். இராணுவப் பிரிவின் பெயர் உம்கொன்றொ வீ சிஸ்வே (umkhonto we sizwe ) தேசத்தின் ஈட்டி என்பது இதன் பொருள்.
இது தொடர்பில் அவர் கூறுகிறார். நான் ஒரு போர் வீரனாக ஒரு போதும் இருந்ததில்லை. போரில் ஒரு போதும் பங்குபற்றியதில்லை, எதிரி மீது துவக்குச் சூடு நடத்தியதில்லை இப்படியான நான் ஒரு இராணுவத்தைத் தொடங்கும் பணியை ஏற்றேன்.
தமிழீழ விடுதலைப் போரும் இப்படித்தான் தொடங்கியது. போர் எம்மீது திணிக்கப்பட்டது. ஒரு பிரபாகரன் ஆயுததாரியாக எழுந்ததற்கு இலங்கை அரசு தான் காரணம். நாம் போரிடாமல் இருந்தால் மனிதர்களில்லை. பதர்களும் பேடிகளுமாவோம்.
விடுதலைப் போரின் தன்மையையும் வலுவையும் மக்களுக்கு எதிராகப் போரிடும் அரசு தான் தீர்மானிக்கிறது என்கிறார் மண்டேலா. அதாவது போரிடத் தூண்டுவது அரசு தான் என்பது மண்டேலாவின் அடிப்படைக் கருத்து.
தனது இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மண்டேலா படித்து உள்வாங்கிய நூல்களின் பட்டியல் நீளமானது. பிடெல் கஸ்ரோவின் புரட்சி வெற்றி பெறுவதற்கு அடித்தளம் அமைத்த பப்திஸ்தா (baptista ) அரசுக்கு எதிராக நடந்த போராட்ட வரலாறுகள்,
டெனிஸ் றைற்ஸ் (denis reitz ) என்ற ஜெனரல் பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராகத் தென்னாபிரிக்காவில் நடத்திய கெரில்லா போர் பற்றிக் கொமான்டோ (commando ) என்ற புத்தகம்.
மாவோவின் திடசங்கற்பமும் மரபுசாராப் போர் முறைகளும் அடங்கிய எட்கார் சினோ (edgar snow ) எழுதிய சீனாவில் சிவப்பு நட்சத்திரம் (red starover china) என்ற விரிவான வரலாற்று நூல்.
மலையும் அடர்ந்த காடும் இல்லாத வெட்டை நிலத்தில் கெரில்லாப் போர் செய்யும் முறை பற்றி யூதப் போராளி மெனாச்செம் பேகின் எழுதிய றிவோல்ற் (revol by menachem begin ) என்ற தந்தோரபாய வழிகாட்டி என்பன முக்கியமானவை.
தமிழீழ விடுதலைப் போர் கெரில்லாப் போர் முறையை நெடுகாலம் நடைமுறைப் படுத்தியது. அந்தக் காலத்தில் பிடித்த நிலப்பரப்பைத் தக்க வைக்கும் வலுவை அது பெற்றிருக்கவில்லை. சீருடை போன்ற மரபுப் படையின் அடையாளங்களுடன் வளர்ச்சி அடைந்த பின் கைப்பற்றிய நிலத்தில் நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும் வலுவைப் புலிகள் பெற்றனர்.
மண்டேலா நிறுவிய எம்கே (mk ) என்று சரக்குப் பெயரால் அறியப்படும் படையின் அதிகாரிகள் கிழக்கு ஜேர்மனி, கியூபா சீனா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றனர். மொசாம்பிக், அங்கோலா ஆகிய அயல் நாடுகளில் படை முகாம்களை உம்கொன்றோ வீ சிஸ்வே படையினர் நிறுவினர்.
ஆனால் தென்னாபிரிக்க நாட்டுக்குள் கெரில்லாப் பாணியில் அழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தினாலும் நாட்டின் நிலப்பரப்பில் ஒரு பகுதியையும் அவர்களால் சிறிது காலத்திற்கேனும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை.
மேற்குலக நாடுகள் தென்னாபிரிக்கா சோவியத் ஒன்றியத்தின் நட்பு வலயத்திற்குள் கறுப்பர்கள் தலைமையில் விழக்கூடாது என்ற நோக்கில் வெள்ளை நிறவெறி அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகித்தன. கறுப்பர்களுக்கு வெற்றி ஈட்டிக்கொடுத்தது.
சர்வதேசச் சூழலும் ஒலிவர் தம்போவும்(oliver tambo ) அவருடைய சகாக்களும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக நடத்திய இராசதந்திர நடவடிக்கை மாத்திரமே என்றால் மிகையல்ல.
முப்பது வருடங்களுக்கு மேலாகத் தாயகம் வராமல் வெளிநாடுகளில் தங்கியிருந்தவர் ஒலிவர் தம்போ டிசம்பர் 1990ல் அவர் நாடு திரும்பினார். நெல்சன் மண்டேலா அளவு முக்கியத்துவம் அவருக்கு உண்டு. அவருடைய பங்களிப்பு பற்றிய ஆய்வு நூல்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
விடுதலைப் புலித் தலைவர்களும் போராளிகளும் அரசின் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களுடைய அந்தஸ்து, அதாவது அரசியல் கைதிகளா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவில்லை. அவர்களுடைய பெயர் விவரங்களை வெளியிட இலங்கை அரசு மறுக்கிறது.
காணாமற் போவதற்குப் பெயர் பெற்ற இலங்கை நாட்டில் அவர்கள் பற்றி அக்கறை கொள்வோர் பலமான குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக பெண் போராளிகள் பற்றிய கவலை மிக அதிகமாக எழுந்துள்ளது.
தனது சிறை அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில் மண்டேலா சொல்கிறார். வீரம் என்பது அச்சம் இல்லாத மனமல்ல. அச்சத்தை வென்ற மனம் தான் வீரத்தின் இருப்பிடம்.
தனது சிறைவாழ்வின் ஒரு பகுதியான 18 வருடங்களை றோபென் தீவில் செலவழித்த அவர் தான் விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கையை ஒரு போதும் இழந்ததில்லை என்கிறார்.
உடலாரோக்கியம் மனவுறுதி பேணல் ஆகியவற்றில் கைதிகள் முக்கிய கவனம் எடுத்தல் அவசியம் என்கிறார்.
சிறை என்பது வைராக்கியத்தை முறிக்கும் கொலைக் களம். உயிர்வாழ வேண்டுமானால் தாயகம் விடுதலை பெறும், நான் அதைப் பார்ப்பேன் என்ற உறுதியுடன் வாழவேண்டும்.

No comments:

Post a Comment